சென்னை: சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் அருகே சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் சொகுசு கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக காரை ஓட்டி வந்தவர் காயமின்றி உயிர் தப்பினார்.
சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் அருகே உள்ள சாலை எப்போதும் பரபரப்பாக இயங்கக் கூடிய சாலையாகும். இங்கு காலை வரிசையாக வாகனங்கள் வந்து கொண்டிருந்தன.
அப்போது ஒரு கார் அந்த சாலையை கடக்கும்போது திடீரென பள்ளம் ஏற்பட்டு லேசாக அந்த சாலை பள்ளத்தில் சாய்ந்தது. உடனே சுதாரித்த ஓட்டுநர் அந்த காரில் இருந்து இறங்கிவிட்டார். பின்னர் அந்த கார் அப்படியே அந்த 5 அடி பள்ளத்தில் சாய்ந்தது. தற்போது போக்குவரத்து போலீஸார் சொகுசு காரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளத்தை சுற்றி பேரிகார்டு அமைத்து வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சொகுசு கார் உருண்டு விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. மெட்ரோ பில்லருக்கு பள்ளம் தோண்டும் போது அதிர்வுகளால் சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னையின் மிக முக்கிய பகுதியான அண்ணா சாலையில் சர்ச் பார்க் பள்ளி அருகே திடீரென சாலை உள்வாங்கி ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக வந்தச 25 ஜி பேருந்தும் காரும் அந்த பல்ளத்தில் சரிந்தன. எனினும் அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர்ச் சேதம் இல்லை. அடியில் நடந்த சுரங்க மெட்ரோ ரயில் பணிகளால் மண் சரிந்து பள்ளம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அது போல் அடுத்த ஆண்டு அண்ணா சாலை - அமெரிக்க தூதரகம் அருகே 10 அடி பள்ளம் ஏற்பட்டது. உடனே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதற்கு மெட்ரோ சுரங்க பணி என சொல்லப்பட்டது. நவம்பர் 2021 ஆம் ஆண்டு திநகர் சாலையில் காரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த காரின் முன் சக்கரம் திடீரென நிலத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் புதைந்தது. குடிநீர் வடிகால் குழாயில் ஏற்பட்ட கசிவு, மண் அரிப்பு என சொல்லப்பட்டது. ஜூன் 2022 ஆம் ஆண்டு ஆழ்வார்பேட்டை - கே.பி.தாசன் சாலையில் கழிவுநீர் அகற்றும் லாரி சென்று கொண்டிருந்த போது பின்புறச் சக்கரங்கள் நிலத்தில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் புதைந்தன. இதற்கு காரணமாக மண் அரிப்பு என சொல்லப்பட்டது. இப்படியாக சென்னையில் மெட்ரோ ரயில் சுரங்க பணிகள், நிலத்தடி நீர் அல்லது கழிவு நீர்க் குழாய்கள் உடையும் போது ஏற்படும் அதிர்வுகளாலும் மண் அரிப்பாலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து ஏற்பட்ட வண்ணம் உள்ளன.