ரயிலில் சூட்கேசில் இருந்த உடல்.. கூடவே சென்னை ஜவுளிக்கடை பை.. சென்ட்ரல் சிசிடிவியில் சிக்கிய தம்பதி!

  • சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் டிராலி சூட்கேஸில் உடல் பாகங்கள் இருந்த சம்பவத்தில், போலீசார் சென்னையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சூட்கேஸை வைத்துச் சென்ற தம்பதியை கண்டறிந்துள்ளனர்.

    Advertisement

    சென்னையில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில், குவாலியர் ரயில் நிலையத்தை கடந்து சென்ற போது, அதன் பொதுப் பெட்டியின் பின் பகுதியில் இருந்த ஒரு சிவப்பு நிற டிராலி சூட்கேஸிலிருந்து ரத்தம் வடிவதையும், கடுமையான துர்நாற்றம் வீசுவதையும் பயணிகள் கவனித்துள்ளனர். இது குறித்து அவர்கள் உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    Advertisement

    ரயில் சிவப்பு பெட்டி

    குவாலியரில் ரயில் புறப்பட்டு விட்டதால், அடுத்த நிறுத்தமான ஆக்ரா ரயில் நிலையத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி அதிகாலை அந்த ரயில் ஆக்ரா கண்டோன்மென்ட் வந்தடைந்ததும், ரயில்வே போலீசார் அந்த பெட்டியில் ஏறி சூட்கேஸை கைப்பற்றினர். அதை திறந்து பார்த்த போது, அழுகிய நிலையில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஓர் ஆணின் உடல் பாகங்கள் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

    சென்னை ஜவுளிக்கடை பை

    அந்த சூட்கேஸிற்குள் சென்னையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையின் பை, சென்னையில் உள்ள கடைகளின் பில்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்ததையடுத்து, அதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கினர். அந்த சூட்கேஸ் சென்னையிலேயே ரயிலில் ஏற்றப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    Advertisement

    இந்த முக்கிய ஆதாரங்களை மையமாக வைத்து தமிழக காவல்துறையுடன் இணைந்து விசாரணை நடத்துவதற்காக உத்தர பிரதேச ரயில்வே போலீசார் சென்னை வந்துள்ளனர். சென்னை ரயில் நிலையங்களின் சிசிடிவி காட்சிகள், அண்மையில் பதிவான மாயமானோர் தொடர்பான புகார்கள், கொலை வழக்குகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    சென்னை சென்ட்ரல் சிசிடிவி

    தமிழ்நாடு ரயில்வே காவல்துறையினர், சென்னை சென்ட்ரல், சென்னை பார்க் மற்றும் சென்னை- தாம்பரம் புறநகர் வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களில் இருக்கும் 350-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் அந்த டிராலி சூட்கேஸை ரயிலில் வைத்தவர்களைக் கண்டறிந்துள்ளனர்.

    Advertisement

    ஒரு ஆணும், ஒரு பெண்ணும் சிவப்பு நிற சூட்கேஸுடன் சென்னை சென்ட்ரலுக்குள் நுழையும் சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளது. அந்த தம்பதியினர் சூட்கேஸை ஒரு பெட்டிக்குள் வைத்து விட்டு ரயில் புறப்படுவதற்கு முன்பே அதிலிருந்து இறங்கி சென்னை பார்க் ரயில் நிலையத்திற்கு நடந்து சென்று அங்கிருந்து தாம்பரம் செல்லும் புறநகர் ரயிலில் ஏறியதை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் கண்டறிந்துள்ளனர்.

    தீவிர விசாரணை

    தாம்பரம் ரயில் நிலையம் வரையிலான அனைத்து ரயில் நிலையங்களிலும் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் அவர்களின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் ரயில்வே காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    விரைவில், அந்த இருவரும் எந்த ஸ்டேஷனில் இறங்கினார்கள் என்பதைக் கண்டறிந்து விசாரணை தீவிரப்படுத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கொலையானவரின் அடையாளங்களைக் கண்டறிந்து வழக்கை துரிதப்படுத்தவும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    English Summary

    In the incident involving the discovery of body parts inside a trolley suitcase on the Tamil Nadu Express train bound for Delhi from Chennai Central Railway Station, the police have analyzed CCTV footage in Chennai and identified the couple who left the suitcase behind.