சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ்

  • சென்னை: சென்னையில் வசிக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையை அதிகம் பாதிக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது போக்குவரத்து நெரிசல். இந்த நீண்டகால பிரச்சனைக்கு தொழில்நுட்பத்தின் உதவியுடன் தீர்வு காண சென்னை மாநகராட்சி புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி, 'நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு' (Intelligent Transport System - ஐடிஎஸ்) எனப்படும் நவீன திட்டத்தை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் முழுமையாக செயல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    Advertisement

    சென்னை மாநகரம் தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. சுமார் 42 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்துள்ள மாநகரப் பகுதியில் 16 லட்சத்திற்கும் அதிகமான கட்டிடங்கள் உள்ளன. தினசரி 1.5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர்.

    Advertisement

    நகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான சாலைகள் இருந்தாலும், முக்கிய போக்குவரத்து பெரும்பாலும் 400 சாலைகளில்தான் நடைபெறுகிறது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் அதிக நெரிசல் ஏற்படுகிறது.
    2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னையில் 33.75 லட்சம் வாகனங்கள் இருந்தது.

    சென்னை போக்குவரத்து

    இந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 63 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனுடன் வெளியூர்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை நகருக்குள் நுழைகின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், சாலையோர ஆக்கிரமிப்புகள், ஒழுங்கற்ற வாகன நிறுத்தம், சிக்னல்களில் ஏற்படும் தாமதம் போன்ற காரணங்களும் நெரிசலை மேலும் அதிகரிக்கின்றன.

    Advertisement

    ஐடிஎஸ் திட்டம்

    இந்த பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை (ஜிகா) நிதியுதவியுடன் ரூ.530 கோடி மதிப்பில் ஐடிஎஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போக்குவரத்தை தானாகவே கட்டுப்படுத்துவது. இதுவரை போக்குவரத்து காவலர்கள் அல்லது முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட நேர அமைப்புகள் மூலம் செயல்பட்ட சிக்னல்கள், இனி நேரடியாக வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு செயல்படும்.

    நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு

    ஒரு சாலை சந்திப்பில் எந்த திசையில் அதிக வாகனங்கள் காத்திருக்கின்றன என்பதை சென்சார்கள் மற்றும் கேமராக்கள் மூலம் ஏஐ கண்காணிக்கும். அதன்படி, அதிக வாகனங்கள் உள்ள பாதைக்கு கூடுதல் நேரம் பச்சை சிக்னல் வழங்கப்படும். வாகனங்கள் குறைவாக இருக்கும் சாலைகளில் தேவையற்ற காத்திருப்பு நேரம் குறைக்கப்படும். இதற்காக 165 முக்கிய சந்திப்புகளில் ஏஐ தொழில்நுட்ப சிக்னல்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. அதில் 112 இடங்களில் பணிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ளன.

    Advertisement

    தானாகவே அபராதம்

    போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில், தானியங்கி கண்காணிப்பு அமைப்புகளும் உருவாக்கப்படுகின்றன. அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், சிக்னல் மீறுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களை கேமராக்கள் பதிவு செய்து, தானாகவே அபராதம் விதிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. மொத்தம் 10 இடங்களில் இந்த வசதி அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 4 இடங்களில் பணிகள் முடிவடைந்துள்ளன.

    மாநகரப் போக்குவரத்து

    பொதுப் போக்குவரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் 2,940 பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 616 பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பணிமனைகளில், குறிப்பிட்ட பேருந்து எங்கு உள்ளது, எத்தனை நிமிடங்களில் வரும் போன்ற தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியும். இந்த முழு திட்டத்தையும் கண்காணிக்க சென்னை வேப்பேரியில் நவீன ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    ஏஐ

    நகரின் பல பகுதிகளில் இருந்து வரும் நேரடி தகவல்கள் இங்கு ஒருங்கிணைக்கப்படும். எங்கு நெரிசல் அதிகரிக்கிறது, எங்கு விபத்து ஏற்பட்டுள்ளது போன்ற விவரங்களை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் பகுதிகளில் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்தும் வகையில், ஏஐ அடிப்படையிலான தகவல் காட்சி பலகைகளும் நிறுவப்படுகின்றன.

    17 இடங்களில் வசதி

    குறிப்பிட்ட இடத்தை அடைய எவ்வளவு நேரம் ஆகும், எந்த பாதை வேகமானது போன்ற தகவல்கள் நேரடியாக காட்சிப்படுத்தப்படும். மொத்தம் 17 இடங்களில் இந்த வசதி அமைக்கப்பட உள்ளது. தற்போது 6 இடங்களில் பணிகள் முடிந்துள்ளன. சிக்னல்களில் நீண்ட நேரம் வாகனங்கள் காத்திருப்பதால் அதிக அளவில் எரிபொருள் வீணாகிறது. இதனால் கார்பன் வெளியேற்றமும் அதிகரிக்கிறது.

    Advertisement

    எரிபொருள் பயன்பாடு

    ஐடிஎஸ் திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், வாகனங்களின் காத்திருப்பு நேரம் குறையும். அதன்மூலம் எரிபொருள் பயன்பாடும் குறைந்து, காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த உதவும் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். பல ஆண்டுகளாக சென்னை மக்களை வாட்டி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு இந்த ஏஐ அடிப்படையிலான ஐடிஎஸ் திட்டம் பெருமளவில் கை கொடுக்கும் என்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்.

    English Summary

    Chennai to launch AI-based Intelligent Transport System in August to reduce congestion, improve traffic flow and enhance commuter experience.