இன்றைக்குச் சிலர் மிக விரைவாகப் பணக்காரன் ஆக வேண்டும், 25 முதல் 30 வயதிலேயே சொந்த வீடு, கார், பைக், சொகுசுப் பொருட்கள், கோடிகளில் வங்கி இருப்பு (Bank Balance) இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதற்காக அவர்கள் தவறான வழிகளில் இறங்குகிறார்கள். திருடுவது, கொள்ளையடிப்பது, ஊழல் செய்வது, லஞ்சம் வாங்குவது, நம்பவைத்து ஏமாற்றுவது, பண முதலீடு செய்யவைத்து ஏமாற்றுவது எனப் பல தவறான செயல்களைச் செய்கிறார்கள்.
அப்படித்தான் சென்னை கோவில்ம்பாக்கத்தில் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, வேலை செய்த மருத்துவர் வீட்டிலேயே நகை மற்றும் பணத்தைத் திருடிய இளம்பெண், தனது காதலனுடன் கைதாகியுள்ளார். அவர்கள் எப்படிச் சிக்கினார்கள் என்பதைப் பார்ப்போம்.
பொதுவாகச் சிலர் அதிக கடன் நெருக்கடி, சொகுசு வாழ்க்கை போன்ற காரணங்களுக்காகத் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். அந்த முடிவின் மூலம் பிரச்சினை தீர்வதற்குப் பதிலாக, அதுவே பெரிய பிரச்சினையாக மாறுகிறது; அவர்களின் எதிர்காலத்தையும் தொலைத்துவிடுகிறது. அப்படித்தான் ஓர் இளம் காதல் ஜோடி தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துள்ளது. அதுவும் எப்படி என்றால், வேலை செய்த வீட்டிலேயே காதலி திருடியதால் இருவரும் சிக்கியுள்ளனர். சென்னை கோவில்ம்பாக்கம் பூபதி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மருத்துவர் கார்த்திக் (வயது 35) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவியும் மருத்துவர் ஆவார். இருவரும் வெவ்வேறு தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்து வருகின்றனர். இவர்களது வீட்டில் வேலை செய்வதற்காக, மயிலாடுதுறை மாவட்டம், மேலப்பாளையம், நடுக்கரை, புதிய தெருவைச் சேர்ந்த ஆர்த்தி (19) என்ற பெண்ணைக் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலைக்குச் சேர்த்தனர். நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிய மருத்துவர் தம்பதியினர், 10 பவுன் நகைகள் வைத்திருந்த சூட்கேஸ் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பீரோவைத் திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் மற்றும் பட்டுப்புடவைகளும் மாயமாகியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்துப் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளிக்கரணை குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அடுக்குமாடி குடியிருப்பின் 'லிப்ட்' அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, மருத்துவர் வீட்டில் வேலை செய்து வந்த ஆர்த்தி, ஒரு சூட்கேஸ் மற்றும் 5 பைகளை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதற்கிடையே, ஆர்த்தி வேலைக்கு வராமல் தலைமறைவானதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை அமைத்த காவல்துறையினர், ஆர்த்தியின் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தார்கள். அப்போது, சென்னை பாரிமுனையில் உள்ள தங்கும் விடுதியில் அவர் அறை எடுத்துத் தங்கியிருப்பது காவல்துறையினருக்குத் தெரியவந்தது. உடனே அங்கு சென்ற தனிப்படை காவல்துறையினர், ஆர்த்தியைக் கைது செய்தனர். அவருடன் தங்கியிருந்த அவரது காதலன் அபினேஷ் (22) என்பவரையும் கைது செய்தனர். விடுதி அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் மற்றும் பட்டுப்புடவைகளைக் காவல்துறையினர் கையோடு பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இருவரும் மருத்துவர் வீட்டில் திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். கைதான காதல் ஜோடி மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் காதல் ஜோடியைக் கைது செய்த பள்ளிக்கரணை குற்றப்பிரிவு தனிப்படை காவல்துறையினரை, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் (பொறுப்பு) அமல்ராஜ் வெகுவாகப் பாராட்டினார்.முதல்வர் விஜய்க்குப் பொன்னாடைக்கு பதிலாகப் புடவையை போர்த்தினாரா நயினார்? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
97-ஐ தொடக்கூடாது.. ஆக்ரோஷமாக களம் இறங்கிய ரிசர்வ் வங்கி .. சாமானியர்கள் அறிய வேண்டியவை