184 ஆண்டுகள் பழமையான.. சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு ‘இருபாலர்’ அந்தஸ்து.. இனி பெண்களும் சேரலாம்

  • சென்னை: பச்சையப்பாஸ் என்று அழைக்கப்படும் சென்னை பச்சையப்பன் கல்லூரி இத்தனை காலம் ஆண்கள் கல்லூரியாக செயல்பட்டு வந்தது. தற்போது அந்த வரலாறு மாற உள்ளது. அந்த கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவதாக புகார்கள் வைக்கப்படும் நிலையில்தான் சென்னை பச்சையப்பன் கல்லூரி தற்போது இருபாலர் கல்லூரியாக மாற உள்ளது.

    Advertisement

    தமிழக உயர்கல்வித் துறையில் ஒரு புதிய வரலாற்று மைல்கல்லாக, சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 184 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பச்சையப்பன் கல்லூரிக்கு, 'இருபாலர்' (Co-Educational) அந்தஸ்து வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    Advertisement

    இனிவரும் கல்வி ஆண்டு முதல் இக்கல்லூரியில் இளங்கலை (UG) பாடப்பிரிவுகளிலும் மாணவிகள் தாராளமாகச் சேர்ந்து பயிலலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை முதுகலை (PG) மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளில் மட்டுமே மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இளங்கலை படிப்புகளுக்கும் இக்கல்லூரியின் கதவுகள் மாணவிகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளன.

    வரலாற்றுத் திருப்புமுனை

    கடந்த 1842-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பச்சையப்பன் கல்லூரி, இந்தியாவின் மிகப்பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், ஈ.வி.கே.சம்பத் மற்றும் கவிஞர் வைரமுத்து போன்ற தமிழகத்தின் ஆளுமைகள், தலைவர்கள் பலரை உருவாக்கிய பெருமை இக்கல்லூரிக்கு உண்டு.

    Advertisement

    பல தலைமுறைகளாக ஆடவர் கல்லூரியாக மட்டுமே இயங்கி வந்த இந்தத் தன்னாட்சி நிறுவனத்திற்கு, தற்போது இருபாலர் அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது அதன் 184 ஆண்டுகாலப் பயணத்தில் மிக முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

    மாற்றத்திற்கான பின்னணி என்ன?

    கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் உள்ள பல அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை சரிவடைந்து வருவதாகக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், இருபாலர் கல்லூரிகளில் (Co-ed) சேருவதற்கு மாணவ, மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பும் ஆர்வமும் நிலவி வருகிறது. இதனால் சேர்க்கை விகிதத்தை உயர்த்தவும், கல்லூரிச் சூழலை மேம்படுத்தவும் இத்தகைய மாற்றங்கள் அவசியமாகின்றன.

    Advertisement

    ஏற்கனவே சென்னை நந்தனத்தில் இயங்கி வந்த ஆடவர் அரசு கலைக் கல்லூரி, சில ஆண்டுகளுக்கு முன்பு இருபாலர் கல்லூரியாக வெற்றிகரமாக மாற்றப்பட்டது. அங்கு மாணவிகள் சேர்க்கைக்குப் பிறகு விண்ணப்பங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. அதே வழியைப் பின்பற்றி, பச்சையப்பன் கல்லூரியிலும் மாணவர் சேர்க்கையை வலுப்படுத்தவும், உள்கட்டமைப்பை முழுமையாகப் பயன்படுத்தவும் கல்லூரி நிர்வாகம் விடுத்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு இந்த அரசாணையை (G.O. No.100) பிறப்பித்துள்ளது.

    வரவேற்பும் நன்றியும்

    தமிழ்நாடு அரசின் இந்த முற்போக்கான முடிவை பச்சையப்பன் கல்லூரியின் நிர்வாகம், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

    Advertisement

    இது குறித்து பச்சையப்பன் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் பேபி குல்னாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

    "1842-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பச்சையப்பன் கல்லூரி, கல்விச் சிறப்பு மற்றும் சமூகப் பொறுப்பின் அடையாளமாக விளங்கி வருகிறது. இந்த இருபாலர் அந்தஸ்து, கல்லூரியின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாகும். அனைவரையும் உள்ளடக்கிய கல்வி, சமத்துவம் மற்றும் சமுதாயத்தின் வளர்ந்து வரும் கல்வி எதிர்பார்ப்புகளுக்கான அர்ப்பணிப்பை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

    இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு, மாணவிகளுக்குத் தரமான உயர்கல்விக்கான அதிக வாய்ப்புகளை உருவாக்குவதோடு, பன்முகத்தன்மையும் உயிர்ப்பும் நிறைந்த கல்விச் சூழலை உருவாக்கும். கல்லூரியின் பாரம்பரியத்தையும் பெருமைமிகு மரபையும் பாதுகாத்தபடியே, நவீன கல்வி மதிப்புகளுக்கு இம்முயற்சி உறுதுணையாக அமையும். இந்த நீண்டகால கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும், உயர்கல்வித் துறைக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்."

    Advertisement

    மாணவிகளுக்குக் கூடுதல் வாய்ப்பு

    சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்கல்லூரியில் தற்போது 12 இளங்கலை (UG) பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் சுமார் 1,100 இடங்கள் இளங்கலையில் நிரப்பப்படுகின்றன. இப்போது இருபாலர் கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளதால், நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து தரமான உயர்கல்வியைத் தேடும் மாணவிகளுக்கு இதுவொரு மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும்.

    இரண்டு நூற்றாண்டுகளை நெருங்கும் ஒரு பாரம்பரியக் கல்வி நிறுவனம், தன் பழமையைக் கைவிடாமல் இன்றைய நவீன காலத் தேவைக்கேற்பத் தன்னை மாற்றிக்கொண்டு முன்னேற்றப் பாதையில் பயணிப்பது ஒட்டுமொத்த தமிழக உயர்கல்வித் துறைக்கே பெருமிதமான விஷயமாகக் கருதப்படுகிறது.

    English Summary

    Chennai's 184-Year-Old Pachaiyappa's College Goes Co-Ed: Tamil Nadu Government Issues Historic Order