சென்னை: சென்னைக்கு இன்று 387 ஆவது வயது. இந்த பிறந்தநாள் கொண்டாட என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளலாம். உழைப்பை மூலதனமாக கொண்டு பிழைக்க தேடி வந்தவர்களை என்றைக்கும் கைவிடாத, "வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தின்" தலைநகர் சென்னை (மெட்ராஸ்)!
சென்னை என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது போக்குவரத்து நெரிசல், தண்ணீர் கஷ்டம், எல்லாத்துக்கும் காசு, காற்று மாசுபாடு, பெட்டி பெட்டியாக வீடு, நாற்றம் பிடித்த கூவம் - இப்படித்தான் நினைவுக்கு வரும்.
ஆனால் பிழைப்புத் தேடி சென்னைக்கு வந்தவர்களை இந்த மாநகரம் என்றுமே கைவிட்டது கிடையாது. தமிழகத்தில் 39 மாவட்டங்கள் இருக்கும் போதிலும் சென்னைக்கு அதிகம் பேர் புலம் பெயர்கிறார்கள். இது தீபாவளி, பொங்கல், நீண்ட விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு எத்தனை பேர் படையெடுக்கிறார்கள் என்பதை பார்த்தாலே தெரியும். குழந்தையை அன்னை காப்பது போல் இந்த சென்னையும் காக்கிறது. இந்தியாவின் 4 முக்கிய நகரங்களில் ஒன்று சென்னை மாநகரம். இந்த நகரம் இன்று 387 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. அதாவது ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஏன் Chennai day கொண்டாடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். 1639ஆம் ஆண்டு இதே நாளில் கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதி பிரான்சிஸ் டே சென்னை பூந்தமல்லியை சேர்ந்த அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரிடம் இருந்து தற்போது தலைமைச் செயலகம் இருக்கும் புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த சிறு கிராமத்தை விலைக்கு வாங்கினார். அந்த இடத்திற்கு பத்திரம் பதிவு செய்யப்பட்ட நாள் 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஆகும். அது முதல் சென்னையின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு முதல் இந்த தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சென்னப்பட்டினம், மதராசப்பட்டினம், மெட்ராஸ் என அழைக்கப்பட்டு வந்த இந்த நகரம் பின்னாளில் சென்னை என்றானது. இங்கு பழமையும் புதுமையும் வாய்ந்த கட்டடங்களை கொண்டு பாரம்பரியத்தின் பொக்கிஷமாக விளங்குகிறது. அன்று சென்னைக்கு புதிதாக வந்தவர்கள் எல்ஐசி கட்டடத்தை அன்னாந்து பார்த்து செல்வர். ஆனால் இன்று அதை விட பெரிய பெரிய கட்டடங்கள் அதிகமாகிவிட்டனர். சென்னையின் மக்கள்தொகையும் அதிகரித்துள்ளது. மழைக்காலங்களில் வெள்ளத்தில் தத்தளிப்பதும் வெயில் காலத்தில் ஒரு சொட்டு தண்ணீருக்கு கஷ்டப்படுவதும் என சென்னை இருந்தாலும் அதற்கான கம்பீரம் என்பது எப்போதும் குறையவில்லை. என்னதான் ஊர்களில் சொந்த வீடு இருந்தாலும் சென்னையில் வாங்க வேண்டும் என்பது பலரது கனவு! இதனால் பலர் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை பேர் வந்தாலும் சென்னை அரவணைத்துக் கொண்டு அவர்களுக்கு அன்பை வாரி கொடுத்து வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு பெட்டிக் கடை வைத்தாலும் சென்னையில் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை ஊட்டிக் கொண்டே இருக்கும் சென்னை பற்றி உங்களுக்கு தெரிந்த கருத்துகளை கமென்டில் பதிவிடுங்கள்.