சென்னையின் 2வது ஏர்போர்ட்.. சோழவரம், வேலூர், உளுந்தூர்பேட்டை.. சீரியஸாகவே பேசுறாங்களே?

  • சென்னை: சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் கட்டும் யோசனை முதன்முதலில் முன்வைக்கப்பட்டு கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டு, நிலம் கையகப்படுத்தப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை தமிழக வெற்றிக் கழக அரசு ரத்து செய்ததைத் தொடர்ந்து, தமிழக அரசு ஒரு புதிய இடத்தைத் தேடி மீண்டும் திட்டமிடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் சோழவரத்தில் விமான நிலையம் அமைக்கலாம் என்று சிலர் யோசனை கூறுகிறார்கள். சிலர் சென்னைக்கு அருகில் உள்ள வேலூரில் விமான நிலையம் அமைக்கலாம் என்று தீவிரமாகவே கேட்கிறார்கள். இன்னும் சிலர் உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் அமைக்கலாம் என்று கேட்கிறார்கள்.

    Advertisement

    சென்னையில் 2-வது விமான நிலையம் எங்கே அமையப்போகிறது, அதற்கான நிலம் எங்கே உள்ளது என்பது தெரியவில்லை. 1998-ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த யோசனை செயல் வடிவம் பெற்றதே ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்புதான். அப்போதுதான் இரண்டாவது விமான நிலையத் திட்டத்திற்கான தேடல் தீவிரமாகத் தொடங்கியது. இதில் முதலில் பரிசீலிக்கப்பட்ட 11 இடங்களில் செய்யூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் ஒன்றை தவெக அரசு விரும்புவதாகச் சொல்கிறார்கள்.

    Advertisement

    ஆனால் பரந்தூர், பன்னூர், திருப்போரூர் மற்றும் படாளம் ஆகிய நான்கு இடங்களைக் கொண்ட இறுதிப் பட்டியலில் இந்த இரண்டு இடங்களும் ஏன் இடம்பெறவில்லை என்பது தெளிவாகத் தெரியவில்லை. பன்னூர் குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருந்தாலும், அது இன்னும் பரிசீலனையில் உள்ளதா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. இதுதான் சென்னை விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட நிலவரம்.

    இந்தச் சூழலில், சென்னையில் இருந்து 130 கி.மீ தொலைவில் உள்ள வேலூரில் ஏராளமான நிலம் உள்ளது என்றும், அங்கு தாராளமாக விமான நிலையம் அமைக்கலாம் என்றும் வேலூர் மாவட்ட மக்கள் தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், சித்தூர் (ஆந்திரா) ஆகிய ஐந்து மாவட்ட மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும்; சென்னை மக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெங்களூரு விரைவுச்சாலையைப் பயன்படுத்தி இரண்டு மணி நேரத்தில் வந்துவிடலாம் என்றும் யோசனை கூறுகிறார்கள்.

    Advertisement

    அதேபோல, காட்பாடிக்கு ரயில் வசதி உள்ளதால், ரயில் மூலமாகவும் எளிதாக விமான நிலையத்திற்கு விரைவாக வந்துவிடலாம் என்றும் கூறுகிறார்கள். அதாவது, சென்னையில் இருந்து 130 கி.மீ தொலைவு தள்ளி சென்னைக்கு விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று யோசனைகளைக் கூறி விவாதித்து வருகிறார்கள்.

    அப்படியே இந்தப்பக்கம், உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் அமைக்க ஏராளமான இடம் உள்ளது; சென்னையில் இருந்து வெறும் 200 கி.மீ தொலைவுதான் உள்ளது; விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களுக்கு ரயில் வசதி உள்ளதால் எளிதாக விமான நிலையத்திற்கு வந்துவிடலாம் என்று அவர்களும் தங்கள் பங்கிற்குப் பேசுகிறார்கள். இதில் உளுந்தூர்பேட்டையில் ஏற்கெனவே விமான நிலையத்திற்கான ஓடுதளம் (Runway) இருக்கிறது என்று கூறும் சில இணையவாசிகள், உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் அமைத்தால் அதன் மூலம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம் போன்ற மாவட்டங்கள் பெரும் வளர்ச்சி பெறும் என்றும் தீவிரமாகப் பேசிவருகிறார்கள்.

    Advertisement

    இன்னும் சிலர் சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் சோழவரத்தில் விமான நிலையம் அமைக்கலாம் என்று கூறுகிறார்கள். சோழவரத்திலும் விமான நிலையத்திற்கான ஓடுதளம் இருக்கிறது. ஆனால் அங்கு பெரிய விமான நிலையம் அமைக்கும் அளவிற்குப் போதிய இடம் இல்லை. ஏரியை பாதியாக ஆக்கிரமித்துத்தான் (வெட்டித்தான்) விமான நிலையம் அமைக்க வேண்டியதிருக்கும். அதற்குச் சுற்றுச்சூழல் விதிமுறைகள் இடம் கொடுக்குமா என்று தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல், ஏரி இருந்த இடம் என்பதால் பறவைகள் அதிகமாக வந்து செல்லும்; அதுவும் விமான நிலையம் அமைப்பதில் சிக்கலையே ஏற்படுத்தும். இதுபற்றித் தெரியாமல் பிரபல ஊடகங்களே சோழவரத்தை மையமாக வைத்து விவாதித்ததைக் காண முடிந்தது.

    Advertisement

    உண்மையில் அரசு விமான நிலையம் அமைக்க வாய்ப்புள்ள இடங்கள் என்றால் பரந்தூர், பன்னூர், படாளம், திருப்போரூர் ஆகியவற்றில் ஒன்றைத்தான் தேர்வு செய்ய முடியும். இதில் பரந்தூர் இல்லை என்ற நிலையில், மத்திய அரசு பன்னூரைத்தான் கேட்கும். அங்கு வேண்டாம் என்றால், மாமல்லன் ஏரி உருவாக்கப்படும் திருப்போரூர்தான் ஒரே வாய்ப்பு. ஏனெனில், படாளம் செங்கல்பட்டைத் தாண்டி சற்றே தொலைவில் உள்ளது. எனவே, விரைவாக முடிவெடுத்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தால் மட்டுமே இந்த மூன்றில் ஒன்றை அரசு தேர்வு செய்ய வழி உள்ளது. வேறு எங்குமே விமான நிலையம் அமைக்க அரசால் முடியாது என்பதே கள யதார்த்தம்.

    English Summary

    Chennai's second airport : There are suggestions to set up an airport at Sholavaram. Some are seriously proposing an airport at Vellore, near Chennai. Others are calling for an airport to be established at Ulundurpet.