அரசுப் பள்ளி சத்துணவில் சிக்கன் பிரியாணி?.. அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த முக்கிய அப்டேட்

  • சென்னை: அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவில் சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்த கோரிக்கையை முதல்வர் விஜய் பரிசீலனை செய்வதாக கூறியுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தவெக அரசு ஆக்கப்பூர்வமாக செயல்படும். காமராஜர் ஆட்சிக் காலத்தில் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் சத்துணவாக மாற்றப்பட்டது. கலைஞர் ஆட்சியில் முட்டை அளிக்கப்பட்டது. ஜெயலலிதா வாரந்தோறும் முட்டை கொண்டு வந்தார்.

    Advertisement

    அந்த வகையில், வாரத்திற்கு ஒருமுறை மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி போட வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளேன். இந்த திட்டம் பல துறைகள் சம்பந்தப்பட்டது. முதல்வர் விஜய் பரிசீலனை செய்வதாகக் கூறியுள்ளார். தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதி வராததால் அரசு பாதிக்கப்படுவது என்பதை விட தமிழ்நாட்டின் வருங்காலம் பாதிக்கப்படுகிறது.

    தமிழ்நாடு அரசில் மிகப்பெரிய பட்ஜெட் அரசுப் பள்ளிகளுக்கு செலவிடப்படுகிறது. இதன் மூலமாக எந்தவிதமான ரிட்டர்னும் கிடைக்காது. இது அறிவின் மீதான முதலீடு. அவ்வாறு முதலீடு செய்யும்போது படிக்கும் மாணவர்கள் பிற்காலத்தில் விஞ்ஞானிகளாக, பொருளாதார நிபுணர்களாக, தமிழ் பண்டிதர்களாக வருவார்கள். இதன் மூலம் ஒரு தலைமுறையே மாறும்.

    Advertisement

    பல காரணங்களைக் கூறி மொழி, கொள்கை பிரச்சனைக்காக தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை தடுப்பது ஏற்புடையது அல்லது. இதனை மத்திய அரசு கருத்தில் கொண்டு நிதியை விடுவிக்க வேண்டும். அதற்கு பேச்சுவார்த்தை மூலமாகவோ, சட்டப்பூர்வமாகவோ நடவடிக்கை முன்னெடுக்கப்படும். திமுக, அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்கள் பகைமை உணர்வுடன் கட்டாயமாக நிறுத்தப்படாது.

    அம்மா உணவகத்தில் மக்களின் வருகை அதிகரித்துள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் அம்மா உணவகத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றி ரகளை செய்த ஆட்சியாளர்களை 2021 இல் பார்த்துள்ளோம். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மக்களின் வருகை அதிகரித்துள்ளது. உணவின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஜெயலலிதாவின் படம் அங்கே இருக்கிறது.

    Advertisement

    இதுதான் தவெக அரசின் ஆட்சி. வேற்றுமையை வளர்க்காது, பகைமையைத் தொடராது இந்த ஆட்சி. நல்ல திட்டங்களை தொடர்வதிலேயே போட்டி இருக்கும். புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றார்.

    English Summary

    School Education Minister Rajmohan has stated that Chief Minister Vijay has said he will consider the request to serve chicken biryani as part of the nutritious meals provided in government schools.