சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலை பொது தீட்சிதர்கள் முறையாக நிர்வகிக்கவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் நிர்வாகக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. கோயிலின் சொத்துகளை மீட்பது, வருமான கணக்குகளை முறையாக பராமரிப்பது, புராதனக் கட்டிடங்களை பாதுகாப்பது என பல்வேறு முக்கிய பொறுப்புகள் இந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபை மீது ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பொது தீட்சிதர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதேநேரத்தில், அரசின் உத்தரவுக்கு ஆதரவாகவும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், இ. மனோகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது கடந்த 2014-ம் ஆண்டு கோயில் நிர்வாகம் தீட்சிதர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, அதன் நிர்வாகம் முறையாக நடைபெறவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டனர். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வி. பாரதிதாசன் குழுவின் தலைவராகவும், ஓய்வுபெற்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன் உறுப்பினராக இருப்பார். பொது தீட்சிதர்கள் சங்கத்தின் செயலாளர், இந்து சமய அறநிலையத் துறை செயலாளர் ஆகியோர் அலுவல் சாரா உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் பொது தீட்சிதர்கள் மேற்கொண்ட தொடர் கட்டுமானப் பணிகளால் புராதனக் கட்டிடங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, பழமையான கட்டிடங்களுக்கு இடையூறாகவும், உரிய அனுமதியின்றியும் கட்டப்பட்டுள்ள தேவையற்ற கட்டிடங்களை அகற்றுவது குறித்து தமிழ்நாடு புராதனச் சின்னங்கள் ஆணையத்துடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் சொத்துகளை மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மீட்க வேண்டும் என்றும், கோயிலுக்குச் சொந்தமான சொத்துகள் அனைத்தையும் கணக்கெடுத்து, மாயமான மதிப்புமிக்க பொருள்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கோயில் சொத்துகளுக்கான வாடகை மற்றும் குத்தகை பாக்கிகளை வசூலிப்பதுடன், அவற்றுக்கான வரவு, செலவுக் கணக்குகளை முறையாகப் பராமரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கோயிலின் வருமானத்தை அதிகரிக்க நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிர்வாகக் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.குழு அமைத்து உத்தரவு
சேதம்
கோயில் சொத்துகள்
அறிவுறுத்தல்