சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி! பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்

  • சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் சிங்கப்பெண் அதிரடி படை திட்டம் தொடங்கப்படவுள்ளது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யத் தொடங்கப்படும் இந்தத் திட்டத்திற்குத் தேர்வாகி இருந்த பெண் காவலருக்கே பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதற்கிடையே பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இது தொடர்பாக விஜய் அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

    தமிழ்நாடு முதல்வராக விஜய் பதவியேற்றபோது விஜய் மூன்று முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முக்கியமானது சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த "சிங்கப்பெண் அதிரடிப்படை' கொண்டு வரப்பட்டது. இருப்பினும், இதுவரை இந்தத் திட்டம் தொடங்கப்படவில்லை.

    பெண் காவலருக்கு தொல்லை

    இதற்கிடையே இந்தச் சிங்கப்பெண் அதிரடிப்படைக்குத் தேர்வான பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாகப் பரபர புகார் கிளம்பியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஒரு பெண் காவலருக்கு, அதே காவல் நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் வாட்ஸ்அப் மூலம் ஆபாச மெசேஜ்களை அனுப்பி, பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது..

    மேலும், அந்தப் பெண் காவலர் தமிழ்நாடு அரசின் சிங்கப்பெண் அதிரடிப்படை பிரிவுக்குத் தேர்வு செய்யப்பட்டும், அவரை அந்தப் புதிய பொறுப்பிற்குப் போக விடாமல் ரிலீவ் செய்யாமல் அந்த இன்ஸ்பெக்டர் தடுத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. இது மட்டுமின்றி இது தொடர்பாகக் கேட்கச் சென்ற அந்தப் பெண் காவலரின் கணவரையும் அவர் மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது.

    பரபரப்பு

    நிலைமை மோசமானதால் பொறுமை இழந்த பெண் காவலர், இந்த விவகாரம் தொடர்பாகத் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பெண் காவலருக்கே, அதுவும் பெண்களைப் பாதுகாப்பை உறுதி செய்ய அமைக்கப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படையில் இருக்கும் பெண் காவலருக்கே இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது பகீர் கிளப்பியுள்ளது.

    நயினார் நாகேந்திரன்

    இதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக அரசில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருப்பதாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது ட்விட்டரில், "சிங்கப்பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத தவெக ஆட்சி! தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில், சிங்கப்பெண் அதிரடிப்படையிலுள்ள பெண் காவலருக்கு காவல் ஆய்வாளர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்துள்ள புகார் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

    இதுதான் தூய சக்தியா?

    பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ் காக்கிச் சட்டை அணிந்த பெண்ணுக்கே பாதுகாப்பை உறுதி செய்யும் திறனற்ற ஆட்சி தான் தூய சக்தியா? வெட்கக்கேடு! "நான் உங்கள் அண்ணன்" என மேடைக்கு மேடை முழங்கும் முதல்வர் விஜய், முதலில் இப்புகாரைத் தீர விசாரித்து, குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விளம்பரத் திட்டங்களை அறிமுகம் செய்வதோடு நில்லாது, தமிழகப் பெண்களுக்கான பாதுகாப்பை உண்மையாக உறுதி செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்..

    இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், சம்பந்தப்பட்ட ஆறுமுகநேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் அவர் தான் எந்தவொரு தவறும் செய்யவில்லை என்றும் அனைத்துப் பெண் காவலர்களையும் சகோதரிகளாகவே பார்ப்பதாக விளக்கமும் அளித்துள்ளார்.

    English Summary

    BJP State President Nainar Nagendran sharply criticized the TVK govt after a woman constable selected for the Singappen Adhiradipadai(பெண் காவலருக்கு பாலியல் தொல்லை): Nainar Nagendran Slams CM Vijay Over Sexual Harassment for lady police.