சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் ரயில்வே தண்டவாளங்களும், மூடப்பட்ட ரயில்வே கேட்டுகளும் உள்ளன. இவற்றை மக்கள் கடந்துசெல்லக்கூடாது என்பதற்காகவே நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஆனால் மக்கள் நடைமுறையில் ரயில்வே தண்டவாளங்களை கடந்து செல்வது தான் அதிகமாக உள்ளது. ஆபத்தை உணராமல் கடந்து செல்லும் போது, சிறுகவனக்குறைவு பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது. குரோம்பேட்டையில் கல்லூரிக்கு சென்ற முதல் நாளிலேயே மாணவிக்கு நடந்தது பற்றி பார்ப்போம்.
சென்னையில் குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர், வண்டலூர், காட்டாங்குளத்தூர், போன்ற பகுதிகளில் ரயில்வே தண்டவாளங்களை மக்கள் மிகவும் ஆபத்தான முறையில் கடப்பது அதிகமாக உள்ளது. ரயில்வே மேம்பாலங்கள் வழியாக வருவதைவிட ரயில்வே தண்டவாளங்கள் வழியாக சாலையை கடப்பது அல்லது பாதையை கடப்பது அவர்களுக்கு எளிதானதாக இருப்பதால், ஆபத்தை பற்றி கவலைப்படமால் தண்டவாளங்களில் நடக்கிறார்கள். அப்படி நடந்த ஒரு கல்லூரி மாணவி இன்று உயிருடன் இல்லை.
சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி கோமதி. இவர்களது மகள் ராஜஸ்ரீக்கு 18 வயது ஆகிறது. இவர், பிளஸ்-2 முடித்துவிட்டு, காட்டாங்கங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். எலக்ட்ரிக்கல் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்துள்ளார். கல்லூரிக்கு செல்ல மின்சார ரயிலில் செல்வதே வசதியானது என்பதால் ரயிலில் செல்ல திட்டமிட்டார். இதன்படி நேற்று கல்லூரியில் முதல் நாள் வகுப்பு தொடங்கியதுதால், அதில் பங்கேற்பதற்காக வீட்டில் இருந்து குரோம்பேட்டை ரயில் நிலையத்துக்கு புறப்பட்டார். குரோம்பேட்டை ராதாநகர் பகுதியில் மூடப்பட்டிருந்த ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றுள்ளார். பொதுவாக ரயில்வே கேட் மூடியிருக்கும் போது, எக்ஸ்பிரஸ் ரயில்கள், லோக்கல் ரயில்கள் கடக்கும். இதனை கவனிக்காமல் வந்த மாணவி ராஜஸ்ரீ, அந்த வழியாக மின்னல் வேகத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் உடலை மீட்டு தாம்பரம் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கல்லூரிக்கு சென்ற முதல் நாளிலேயே மாணவி ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் குரோம்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.