சென்னை: மத்திய அரசையோ மாநில அரசையோ விமர்சிக்கக் கூடாது என்ற பொருளில் ஒரு கட்டுப்பாட்டை விஜய் தலைமையிலான தவெக அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973-ன் விதி 12-ஐ சுட்டிக்காட்டி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் அ. சோமசுந்தரம் அனைத்து அலுவலர்களுக்கும் அதிரடி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். இந்த உத்தரவு அனைத்துச் சார்நிலை அலுவலகங்களுக்கும், பணியாளர்களுக்கும் அனுப்பப்பட்டு உடனடியாகப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அந்த சுற்றறிக்கையில் கூறுகையில், "அரசு ஊழியர்கள் மத்திய அல்லது மாநில அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை பொதுவெளியிலோ, ஊடகங்களிலோ (செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், மீம்ஸ்கள் - Memes போன்றவை) அல்லது பொதுக்கூட்டங்களிலோ பாதகமாக விமர்சிக்கக் கூடாது. மேலும், பிற அரசுகளுடனான நல்லுறவைப் பாதிக்கும் வகையிலான எந்தவொரு கருத்தையும் எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது.
அரசை விமர்சித்து நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அல்லது உரைகள் இடம்பெறும் அலுவல் சாராத கூட்டங்களில் அரசு ஊழியர்கள் எக்காரணம் கொண்டும் பங்கேற்கக் கூடாது. விதிகளுக்கு மாறாகச் செயல்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது அரசு ஊழியர் நடத்தை விதிகளின் கீழ் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு அந்த உத்தரவில் எச்சரித்துள்ளது தமிழக அரசு பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள இந்தத் தீவிரக் கட்டுப்பாடுகள் மற்றும் எச்சரிக்கை உத்தரவு நேற்று மாலை சமூக வலைதளங்களில் வெளியாகியது. இதை பார்த்த பல அரசு ஊழியர்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகிறார்கள். சில அரசியல் கட்சி நிர்வாகிகளுமே, இனிமேல் அரசை விமர்சிக்கவே கூடாதா என்று ஆவேசமாக கேள்வி எழுப்பி கமெண்டுகளை பதிவிடுவதை காண முடிந்தது. ஏனெனில் இந்த சுற்றறிக்கையின் குறிப்பிட்டுள்ளபடி அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை விமர்சிக்கும் கருத்துகளைத் தெரிவித்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற அச்சம் அரசு ஊழியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தற்போதுஉள்ள நிலவரப்படி அரசு ஊழியர்களும் பொதுமக்கள்தான். அவர்களுக்கும் அரசின் செயல்பாடுகள் குறித்து கருத்துகளை வெளியிட முடியும். சாமானிய மக்களால் ஒரு அரசு மருத்துவமனையில் மருந்துகள் இல்லை என்றால், அதைச் சுட்டிக்காட்ட முடியும், அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகள் குறித்து எழுத முடியும், - ஒரு மக்கள் நலத்திட்டம் சரியாகச் செயல்படுத்தப்படவில்லை என்றால் விமர்சிக்க முடியும், அரசின் கொள்கையை நையாண்டி செய்யும் மீம்ஸ் வெளியிட முடியும். இந்தச் செயல்கள் அனைத்தையும் இனி ஊடகங்களில் அல்லது சமூக ஊடகங்களில் தெரிவிக்க முடியாது என்ற கவலை அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல் சுற்றறிக்கையில் அரசின் கொள்கைகளுக்கு எதிரான விமர்சனங்கள், பிற அரசுகளுடனான உறவைப் பாதிக்கக்கூடிய கருத்துகள், அரசை விமர்சிக்கும் தீர்மானங்கள் அல்லது உரைகள் இடம்பெறும் அலுவல் சாராத கூட்டங்களில் பங்கேற்பது ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், ஆக்கபூர்வமான விமர்சனம் எது, ஒழுங்கு நடவடிக்கைக்கு வழிவகுக்கும் விமர்சனம் எது என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.. எனவே தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதையே தவிர்க்க வேண்டிய நிலை அரசு ஊழியர்களுக்கு வரலாம். அதேபோல் ஒரு அரசு ஊழியர் தனது துறையில் நடக்கும் முறைகேடு அல்லது நிர்வாகக் குறைபாட்டைச் சுட்டிக்காட்ட விரும்பினாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமோ என்ற அச்சமும் இந்த சுற்றிக்கையால் ஏற்பட்டுள்ளதாம். எனினும் அரசு ஊழியர்கள் அரசியல் நடுநிலையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தங்களுடைய பதவியைப் பயன்படுத்தி ஒரு கட்சிக்குச் சாதகமாகவோ எதிராகவோ செயல்படக் கூடாது என்பது தமிழக அரசு விரும்புகிறது. அதற்கு இந்த சுற்றறிக்கை அவசியம் என்று நம்புகிறது. எனினும் ஆக்கபூர்வமான விமர்சனத்தையும் தவறுகளைச் சுட்டிக்காட்டும் உரிமையை பறித்துவிடக்கூடாது என்பதே மக்களின் வாதம் ஆகும்.தங்கம் விலை ஒரு லட்சத்திற்கு கீழ் வரலாம்? வரலாற்றில் இல்லாத மாற்றம் வரப்போகிறது
ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத வன்முறை.. பல இடங்களில் வேட்புமனுக்கள் கிழிப்பு