SP Vs PC: தமிழக காங்கிரஸில் உள்கட்சி மோதல்? விஜய் என்ன நினைப்பார்? கதறும் கதர்கள்!

  • சென்னை: தமிழக காங்கிரஸில் கோஷ்டி அரசியலுக்கு பஞ்சமிருக்காது என்பதற்கேற்ப தற்போது எம்பி பிரவீன் சக்கரவர்த்திக்கும் கட்சியின் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    வரும் லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளர் விஜய் என தவெகவினர் கூறி வருகிறார்கள். ஆனால் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், அமைச்சர்கள் ராஜேஷ்குமார், பெ.விஸ்வநாதன் உள்ளிட்டோர் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என மறுப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    Advertisement

    கடந்த சில தினங்களாக பிரதமர் வேட்பாளர் என்ற விஷயத்தில் தவெக- காங்கிரஸுக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள் நீடித்து வருகின்றன. ஆனால் இதையெல்லாம் பார்த்துவிட்டு விஜய் தனது கட்சியினரை தடுக்கவும் இல்லை, ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என சொல்லவும் இல்லை.

    இந்த நிலையில் அண்மைக்காலமாக தவெகவுக்கு எதிராகவும் திமுகவுக்கு ஆதரவாகவும் செல்வப்பெருந்தகை கருத்து சொல்லி வருகிறார். அதில் கூட்டணி மாறியதன் மூலம் காங்கிரஸுக்காக உழைத்த ஸ்டாலினுக்கு விசுவாசமாக இல்லையோ என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

    நேற்றைய தினம் செல்வப்பெருந்தகை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் "ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்றால், அவர்தான் வேட்பாளர் என்பதை கூட்டணி கட்சிகள் ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படியில்லை என்றால் இந்த கூட்டணியில் ஏன் இருக்க வேண்டும்? என கேள்வி எழுப்பியிருந்தார். இது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

    Advertisement

    இந்த நிலையில் செல்வப்பெருந்தகையின் பேச்சுக்கு மாநிலங்களவை எம்பி பிரவீன் சக்கரவர்த்தி பேசுகையில், கூட்டணி குறித்து கருத்து சொல்ல செல்வப்பெருந்தகை யார்? இதற்கு முன்பு அவர் காங்கிரஸ் தலைவராக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அவர் எந்த பொறுப்பிலும் இல்லை, அப்படியிருக்கும் போது இந்த கருத்துகளை எல்லாம் பேசித்தான் ஆக வேண்டுமா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

    இந்த நிலையில் பிரவீன் சக்கரவர்த்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில், செல்வப்பெருந்தகை தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

    அவர் கூறியிருப்பதாவது: கூட்டணி பற்றி பேச செல்வப்பெருந்தகை யார் எனக் கேட்கிறார் அறிவு ஜீவி என்று கூறிக்கொள்ளும் ஒருவர்.

    Advertisement

    வடமாநிலத்தில் எங்கள் தலைவர் சென்ற பின் அவர் இருந்த மேடையை தண்ணீர் உற்றி கழுவிய அழுக்கேறிய மதவாத மேட்டுக்குடி மனநிலையின் நீட்சியே இது.

    மாண்புமிகு நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத எவரோடும் கூட்டணி எதற்கு என்பதே என் கேள்வி?

    அதற்கு நீண்ட நேரம் முதல்வர் சிரித்துப் பேசினார் என்கிறார் அந்த அறிவு ஜீவி.

    உங்களுடன் நீண்ட நேரம் சிரித்து பேசுவதுதான் கூட்டணியில் தொடருவதற்கான ஒப்பந்தமா? சரி முதல்வராவது ஒரே ஒரு முறை ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிவிட்டால் போதுமே. பிரச்சினை தீர்ந்ததே.

    Advertisement

    முதல்வர் கூட சொல்ல வேண்டாம் அந்தக் கட்சியில் உள்ள முன்னனிப் பொறுப்பில் உள்ளோர் யாராவது சொல்லட்டுமே, அது கூட வேண்டாம், நீண்ட நேரம் உங்களிடம் சிரித்துப் பேசிய முதல்வரிடம் நம் அணியின் பிரதமர் வேட்பாளர் எங்கள் தலைவர் ராகுல் காந்திதான் என்று நீங்கள் அழுத்தமாகச் சொல்லி அதை அவரும் ஏற்றுக்கொண்டு உங்களிடமாவது உத்தரவாதம் தந்தாரா? தந்திருந்தால் அதையாவது சொல்லுங்களேன்.

    பிரதமர் மோடி குறித்தோ, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தோ, பாஜக குறித்தோ சட்டப்பேரவையில் விமர்சித்தால் அது சட்டப்பேரவைக் குறிப்பில் இருந்து வேகமாக நீக்கப்படுகிறதே அது ஏன் என்று அடுத்த முறை சிரித்துப் பேசும் போது முதல்வரிடம் கேட்டுச் சொல்லுங்கள்.

    Advertisement

    உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது; உழைத்து இயக்கத்தை வளர்ப்பதுதான் கடினம். பதவியின் உயரம் ஒருவரின் அரசியல் உயரத்தைத் தீர்மானிப்பதில்லை; அவர் இயக்கத்திற்காகச் செய்த உழைப்பும் அர்ப்பணிப்புமே அதைத் தீர்மானிக்கும்.

    காலம் பலரை முன்னிறுத்தும்; அதே காலம் பலரை மறந்தும் போகும். ஆனால் ஒரு பேரியக்கத்திற்காக நேர்மையாக உழைத்தவர்களின் பங்களிப்பை வரலாறு பதிவு செய்யும்.

    காங்கிரஸ் பேரியக்கம் தனிநபர்களைவிடப் பெரியது. பதவிகளைவிட அதன் கொள்கை பெரியது.

    தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் தான் பிரதமர் வேட்பாளர் என்போர் பக்கம் நின்று கொண்டு என் தலைவர் திரு ராகுல் காந்தி தான் பிரதமர் எனச் சொல்லும் என் மீது கல்லெறிபவர் என்னை யார் என்று கேட்கிறார்.

    உரக்கச் சொல்கிறேன். நான் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என விரும்பும் காங்கிரஸ் தொண்டன். சுயமரியாதையுடன் இந்த மண்ணின் மைந்தன், பூர்வகுடி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியில் தவெக கூட்டணிக்கு எதிராக குரல் எழுந்துள்ளது. அத்துடன் இரு நிர்வாகிகளும் மாறி மாறி வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தமிழக காங்கிரஸில் உள்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.

    இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினரிடம் கேட்ட போது அவர்கள் கூறுகையில், "காங்கிரஸுக்குள் உள்கட்சி பிரச்சினை ஏற்பட்டால் அது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும். தவெக கூட்டணி, பிரதமர் வேட்பாளர் போன்ற விவகாரங்களில் தலைவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு பேசுவது கூட்டணிக்குள் குழப்பத்தை விளைவிக்கும்.

    அத்துடன் முதல்வர் விஜய்யுடனான உறவிலும் விரிசல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. திமுகவுடன் கூட்டணி முறிந்ததற்காக செல்வப்பெருந்தகை ஆதங்கப்படுகிறார். ஆனால் திமுகவில் என்றைக்காவது இது போல் ஆட்சியில் பங்கு கிடைத்திருக்கிறதா?

    ராகுல் பிரதமராவதில் காட்டும் விருப்பத்தை, காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதற்கும் செல்வப்பெருந்தகை காட்ட வேண்டும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் உள்கட்சி மோதல் அதிகரித்தால் காங்கிரஸ் ஆதரவு வாக்குகள் சிதறும்.

    கடந்த சட்டசபை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி விவகாரத்தில் ஆளாளுக்கு கருத்து சொல்ல வேண்டாம் என காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை சொல்லியிருந்தார். அப்படியிருக்கும் போது அவரே இது போன்ற ஒரு தவறை செய்யலாமா? டெல்லி தலைமையும் தமிழக தலைமையும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்து பயணிக்கும் போது இவர் மட்டும் தனியார் விசுவாசம், துரோகம், பூர்வக்குடி என பேசுவது எந்த விதத்தில் நியாயம்? என கேள்வி எழுப்புகிறார்கள்.

    English Summary

    War of Words has erupted between Ex president Selvaperunthagai and MP Praveen Chakravarthy in PM candidate issue.