சென்னை: சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என முதல்வர் விஜய், சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். ரூ 1200 கோடி மதிப்பில் இந்த தலைமைச் செயலகம் அமை்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. அப்போது முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதில் சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும்.
தற்போதுள்ள தலைமைச் செயலகம் இரு கட்டடங்களில் நடைபெறுகிறது. ஒன்று புனித ஜார்ஜ் கோட்டை, மற்றொன்று நாமக்கல் கவிஞர் மாளிகை. இந்த மாளிகையில் 30-க்கும் மேற்பட்ட துறைகள் இயங்கி வருகின்றன. மாநில அரசின் விரிவடைந்து வரும் நிர்வாக தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் நமது கவிஞர் மாளிகை 1978 ஆம் ஆண்டு 3.75 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரை தளம், 10 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இங்கு 6000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இடப்பற்றாக்குறையின் காரணமாக நிர்வாக நலனை கருதி ஓமந்தூரரார் அரசின் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. ஆனால் இது பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. மேலும் தற்போதுள்ள இரு கட்டடங்களிலும் நாளுக்கு நாள் அதிகாரிகள், ஊழியர்கள், துறைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உலகத்தரத்தில் ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் அமைப்பது அவசியம். ரூ 1200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுரடி பரப்பில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும். நவீன வசதிகளுடன் கூடிய அலுவலகம் அமைக்கப்படும். புனித ஜார்ஜ் கோட்டை, தொல்லியல் துறை, பாதுகாப்பு துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ளன. புனித ஜார்ஜ் கோட்டை வரலாற்றுச் சின்னமாகும் என விஜய் அறிவித்தார். இங்கு தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்று வர வசதிகள், பசுமைக் கட்டட தர நிலைகளுக்குள்பட்டு நவீன நிர்வாக வளாகம் உருவாக்கப்படும். போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள், அலுவலர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும். அனைத்து அரசுத் துறைகளும் ஒரே கட்டடத்தில் இயங்கும். புனித ஜார்ஜ் கோட்டை குறித்து விஜய் கூறியிருப்பதாவது: புனித ஜார்ஜ் கோட்டையானது 1640ஆம் ஆண்டு சென்னை வணிக செயல்பாட்டு மையத்திற்கான வாங்கப்பட்ட நிலத்தில் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. 1644 ஆம் ஆண்டு இந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. 1652 ஆம் ஆண்டு பிரசிடென்சி நிலைக்கு உயர்த்தப்பட்ட பிறகு, பிரிட்டிஷ் ஆட்சியின் அதிகாரப்பூர்வ தலைமை இடமாகத் திகழ்ந்தது. கிட்டத்தட்ட 400 ஆண்டுகாக தமிழக அரசின் நிர்வாக மையகமாகவும் மாநிலத்தின் ஆட்சி பாரம்பரியத்தின் அடையாளமாகவும் விளங்கி வருகிறது. சுமார் 107 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வளாகத்தில் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தலைமைச் செயலகத்தின் பயன்பாட்டிற்காக சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே உள்ளது. மீதமுள்ள நிலப்பரப்பு இந்திய பாதுகாப்பத் துறை மற்றும் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் இவ்வளாகத்தை விரிவுப்படுத்தவோ மேம்படுத்தவோ முடியவில்லை. இதனால் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என தெரிவித்திருக்கிறார்.