கோவை சூலூர் சிறுமி கொலை! மன்னிக்க முடியாத குற்றம்! குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய விஜய் உத்தரவு

  • சென்னை: கோவை சூலூரில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் துரிதமாக விசாரணை நடத்தி அராஜக செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தரப்படும் என முதல்வர் ஜோசப் விஜய் உறுதி அளித்துள்ளார்.

    Advertisement

    இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் விஜய் எந்த கண்டனத்தையும் தெரிவிக்காதது விமர்சனங்களுக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.

    தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.

    இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    Advertisement

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 10 வயது சிறுமி, கடந்த வியாழக்கிழமை மாலை வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்தார்.

    நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடிப் பார்த்துள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், சூலூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினர்.

    Advertisement

    போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், நேற்று இரவு சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் குளக்கரையோர முட்புதர் ஒன்றில் சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

    இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை இஎஸ்ஐ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சிறுமி மாயமான பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் சிறுமியைத் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து, நேற்று பிற்பகலில் கார்த்திக்கைப் பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமிக்குத் தான் ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால், சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று, கொடூரமாகக் கொலை செய்ததை கார்த்திக் ஒப்புக் கொண்டார்.

    Advertisement

    மேலும், இந்த கொடூரக் கொலைச் சம்பவம் குறித்துத் தெரிந்திருந்தும், அதனை வெளியில் சொல்லாமல் மறைத்து குற்றவாளிக்கு உடந்தையாகச் செயல்பட்டதாக மோகன்ராஜ் என்பவரையும் போலீசார் கண்டறிந்தனர்.

    இதையடுத்து, இக்கொலையில் தொடர்புடைய முதன்மை குற்றவாளி கார்த்திக் மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்த மோகன்ராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட கார்த்திக், போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்றபோது காலில் காயமடைந்ததால், அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மற்றொரு குற்றவாளியான மோகன்ராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், அவரை வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பெற்று சிறையில் அடைத்தனர்.

    Advertisement

    இந்த கொடூர சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தியிருந்தனர். இந்த சம்பவம் நடந்து 12 மணி நேரம் ஆகியும் விஜய் எந்த கண்டனமும் தெரிவிக்காமல் இருந்தது அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது.

    English Summary

    Tamil Nadu Chief Minister Joseph Vijay has assured that a speedy investigation will be carried out in the brutal murder case of a young girl in Coimbatore’s Sulur. He stated that those involved in the heinous crime and acts of violence would face the strictest legal punishment.