கொட்டும் மழையில் குடையுடன் வந்து ஆய்வு.. காத்திருந்த பொதுமக்களை பார்த்து ‘குஷி’யான முதலமைச்சர் விஜய்

  • சென்னை: கொட்டும் மழையில் குடையுடன் வந்து சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்டார். மழையையும் பொருட்படுத்தாமல் அவரைப் பார்க்க காத்திருந்த பொதுமக்களை நோக்கி கையசைத்து உற்சாகமூட்டினார் முதல்வர் விஜய்.

    Advertisement

    சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில், கோயம்பேட்டில் இயங்கிவரும் 45 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை முதலமைச்சர் விஜய் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சுத்திகரிப்பு ஆலையின் திறன் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் முதலமைச்சர் விஜய்.

    Advertisement

    முதல்வர் விஜய் ஆய்வு

    தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்ற ஜோசப் விஜய், அவ்வப்போது மாலை நேரங்களில் ஆய்வுப் பணிகளுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில், இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள 3 ஆம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்றார்.

    சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் கோயம்பேட்டில் உள்ள 45 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் முறையிலான மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்.

    Advertisement

    கோயம்பேட்டில் விஜய்

    சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில், 438 கழிவு நீரேற்று நிலையங்கள் மற்றும் 22 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் மூலம் கழிவுநீர் மேலாண்மை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகரின் நீர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சுழற்சி நீர் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்தவும், கோயம்பேடு மற்றும் கொடுங்கையூரில் நாளொன்றுக்கு தலா 45 மில்லியன் லிட்டர் (MLD) திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் முறையிலான மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

    இந்த இரண்டு நிலையங்களும் நாளொன்றுக்கு 90 மில்லியன் லிட்டர் கழிவு நீரை சுத்திகரித்து வருகின்றன. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மேலும் உயர்தரத்தில் சுத்திகரித்து, தொழிற்சாலைகளுக்கு தேவையான தரமான நீரை வழங்குவதாகும். இதன்மூலம் குடிநீர் மற்றும் நிலத்தடி நீரின் பயன்பாடு குறைக்கப்படுவதுடன், தொழிற்சாலைகளுக்கு நிலையான மாற்றுநீர் ஆதாரம் உருவாக்கப்படுவதோடு, சென்னை மாநகரின் நீண்டகால நீர் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    கழிவுநீர் சுத்திகரிப்பு மையம்

    நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் உயர்தர மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் தொழிற்துறைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டு வந்த குடிநீர், தற்போது பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்காக வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், நிலத்தடி நீர்ப்பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்பட்டுள்ளதுடன், கட்டுமானத்துறை, ரெடிமிக்ஸ் கான்கிரீட் (RMC) மற்றும் கான்கிரீட் பிளாக் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்பாடும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    ஆய்வு செய்த முதல்வர் விஜய், சுத்திகரிப்பு நிலையம் எவ்வாறு செயல்படுகிறது, பயன்படுத்தப்படும் தொழில் நுட்பங்கள் குறித்து அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவர் அங்கு ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது, அரசு தலைமை கொறடா ரா.சபரிநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் த.ஆனந்த் ஐஏஏஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Advertisement

    குடையுடன் நடந்து வந்தார்

    ஆய்வுப்பணிகளை முடித்த பின்னர், வளாகத்தை விட்டு வெளியே வந்த முதல்வர் விஜய் சாலையின் இருபுறமும் காத்திருந்த மக்களைப் பார்த்து கை அசைத்தார். முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்ட சமயத்தில் கோயம்பேடு பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. கொட்டும் மழையிலும் விஜய்யை காண பலர் அப்பகுதியிலும், பாலத்திற்கு அடியிலும் காத்திருந்தனர்.

    இதனையடுத்து, காரில் இருந்து கீழே இறங்கி கையில் குடை பிடித்தவாறு முதல்வர் விஜய் கிட்டத்தட்ட 500 மீட்டர் தொலைவு நடந்தபடியே சென்றார்.
    முதல்வரை பார்த்த மகிழ்ச்சியில் பொதுமக்களும் உற்சாகமாக குரல் எழுப்ப, மக்களைப் பார்த்து சிரித்தபடியே கைசையத்தவாறு நடந்து சென்றார்.

    English Summary

    Tamil Nadu Chief Minister Joseph Vijay inspected the sewage treatment plant in Koyambedu, Chennai, while carrying an umbrella amidst the pouring rain. Disregarding the rain, he waved to the members of the public who were waiting to see him, cheering them up.