ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி

  • சென்னை: தமிழக அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து சிறப்பாக செயல்படும் என்றும், மாணவர்களின் தேவைக்கேற்ப அதன் மெனு கார்டு மேம்படுத்தப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    மேலும், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கான அனைத்து விலையில்லா நலத்திட்டங்களும் முறையாக வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    Advertisement

    சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 6 தையல் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய பிறகு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "தமிழகத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பை சில நாட்கள் தள்ளிப்போட வேண்டும் என பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வந்துள்ளது. இது தொடர்பாக கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாட்டில் வெப்பநிலை குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டிருக்கிறோம். அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து ஓரிரு நாட்களில் பள்ளி திறப்பு தேதியை அறிவிப்போம்.

    Advertisement

    ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூன் நான்காம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். நான்காம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூன் ஒன்றாம் தேதியா அல்லது வேறு தேதி மாற்றப்படுமா என்பது முதல்வருடன் பேசிய பிறகு இறுதி முடிவு எடுத்து அறிவிக்கப்படும்." என்றார்.

    மேலும் பேசிய அவர், கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டமாக இருந்தாலும் மாணவர்களுக்கு பயனுள்ள திட்டமாக இருந்தால் அனைத்து திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அந்த வகையில் காலை உணவு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும், அது நிறுத்தப்படாது.

    Advertisement

    காலை உணவு திட்டத்தை இன்னும் மேம்படுத்தி சத்தான உணவுகள் வழங்க திட்டமிட்டு வருகிறோம். இப்போது உள்ள நடைமுறைப்படி மாணவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினசரி ஒவ்வொரு வகையான உணவுகள் வழங்கப்படுகிறது. அந்த மெனுவில் மாற்றம் வேண்டும் என கோரிக்கைகள் வரும் நிலையில் அது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம்.

    மாணவர்களுக்கு தேவையான சத்தான உணவுகள் காலை உணவு மூலம் தொடர்ந்து வழங்கப்படும் இந்த திட்டம் நிறுத்தப்படாது. காலை உணவு தரமாக வழங்கப்பட வேண்டும் தரமாக வழங்கப்படாத நிலை இருந்தால் எந்த அதிகாரியாக இருந்தாலும் ஆசிரியராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    Advertisement

    பள்ளிக்கல்வித்துறையில் சிபாரிசுகளுக்கு வேலை இல்லை. பள்ளிக்கல்வித்துறையில் பணம் கொடுத்து சிபாரிசு செய்து பணிகளை செய்த காலம் முடிந்துவிட்டது. மிகவும் நேர்மையாக பள்ளிக்கல்வித்துறை செயல்படும். பள்ளி கல்வித்துறையில் தவறு செய்யும் அலுவலர்கள் மீது தயவு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். பிஎம்ஸ்ரீ பள்ளிகளை பொறுத்தவரையில் இருமொழிக் கொள்கைதான் எங்கள் டி.என்.ஏ. எத்தனை முறை கேட்டாலும் எங்களுடைய கொள்கை இரு மொழிக்கொள்கைதான். அதில் எந்த மாற்றமும் கிடையாது.

    தென் மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் இடையே சாதிய மோதலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் தென்மாவட்டங்களில் மாணவர்களிடையே சாதிய மோதல் ஒரு லிட்டர் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றது. அதனை தடுப்பதற்கு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து மாணவர்களிடையே ஒற்றுமையை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பிஞ்சி நெஞ்சில் நஞ்சு கலந்திருந்தால் அதனை தடுக்க மாணவர் சமுதாயத்திடையே ஒற்றுமை மேம்பட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

    English Summary

    School Education Minister Rajmohan has stated that the Chief Minister's Breakfast Scheme will continue to function effectively and without any interruption in Tamil Nadu government schools, and that its menu will be enhanced to meet the needs of the students.