எழுத்தாளர் பூமணி இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை.. முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பு

  • சென்னை: மறைந்த எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். "கரிசல் நிலத்தின் மண் வாசனையும், அடித்தட்டு மக்களின் வாழ்வின் நுட்பமான யதார்த்தங்களும் நிரம்பிய படைப்புகள் மூலம் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்திய முக்கியமான படைப்பாளியான பூமணியின் மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு" என விஜய் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளரும், கரிசல் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையுமான பூமணி (79) நேற்றிரவு காலமானார். உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

    Advertisement

    எழுத்தாளர் பூமணியின் உடல், இறுதிச் சடங்குகளுக்காக அவரது சொந்த ஊரான கோவில்பட்டிக்குக் கொண்டு செல்லப்பட்டு அவருடைய இல்லத்தில் இன்று மாலை 4 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் மறைந்த எழுத்தாளர் பூமணிக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். பூமணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் விஜய், இலக்கியத் துறையில் பூமணியின் பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளருமான பூலித்துரை மாணிக்கவாசகம் எனும் பூமணி காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

    பூமணி கரிசல் நிலத்தின் மண் வாசனையும், அடித்தட்டு மக்களின் வாழ்வின் நுட்பமான யதார்த்தங்களும், வரலாற்றின் ஆழமான சாட்சியங்களும் நிரம்பிய படைப்புகளின் மூலம் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்திய முக்கியமான படைப்பாளி ஆவார்.

    அவரது 'அஞ்ஞாடி' நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றது, அவரது இலக்கிய ஆளுமைக்கு கிடைத்த உயரிய அங்கீகாரமாகும். மேலும், அவரது 'வெக்கை' நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான 'அசுரன்' திரைப்படம், அவரது எழுத்தின் வீச்சை உலகறியச் செய்தது.

    Advertisement

    பூமணி மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ் இலக்கிய உலகத்தைச்
    சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இலக்கியத் துறையில் பூமணியின் பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்." என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

    English Summary

    Chief Minister Vijay has announced that the mortal remains of the late writer Poomani will be laid to rest with state honours. Vijay stated that the passing of Poomani—a significant creator who enriched Tamil literature through works imbued with the earthy essence of the *Karisal* region - is an irreparable loss to the world of Tamil literature.