கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா?


  • சென்னை: முதல்வராக பதவியேற்ற பிறகு தொடர்ந்து கோட் சூட்டில் மட்டுமே வந்துகொண்டிருந்த விஜய், முதல் முறையாக இன்று பட்டு வேஷ்டி மற்றும் சட்டையில் தலைமைச் செயலகம் வந்தது அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. தனது மேலாளர் ஜெகதீஷ் வீட்டு இல்ல புதுமணை புகுவிழாவிற்காக பட்டு வேஷ்டி சட்டையில் சென்று இருந்த விஜய் அப்படியே அங்கிருந்து தலைமை செயலகம் வந்துள்ளதால் இந்த மாற்றம் என தெரியவந்துள்ளது.

    Advertisement

    தமிழக முதல்வராக விஜய் கடந்த 10 ஆம் தேதி பதவியேற்றார். பதவியேற்ற நாளில் இருந்து விடுமுறை நாட்கள் நீங்கலாக தினமும் தலைமை செயலகம் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தினமும் காலை 9.30 மணியளவில் தலைமை செயலகம் வருகை தரும் விஜய் மாலை 4 மணி வரை அலுவல் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

    Advertisement

    பட்டு வேஷ்டி சட்டையில் வந்த விஜய்

    விஜய்யின் இந்த செயல்பாடு அதிகாரிகளுக்கே வியப்பை கொடுப்பதாக உள்ளது. அதேபோல முதல்வரான பிறகு எப்போதும் கோட் சூட் அணிந்தபடியே அரசு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க செல்லும் போதும் கோட் சூட் அணிந்தே விஜய் சென்று இருந்தார். தினமும் கோட் சூட் அணிந்தபடியே தலைமை செயலகம் வரும் முதல்வர் விஜய் இன்று பட்டு வேஷ்டி சட்டையில் தலைமைச் செயலகம் வருகை தந்தார்.

    முதல்வராக பதவியேற்றதில் இருந்து கோட் சூட்டிலேயே வருகை தந்த முதல்வர் விஜய்யை இன்று தலைமை செயலக அதிகாரிகள், ஊழியர்கள் பட்டு வேஷ்டி சட்டையில் பார்த்ததும் ஆச்சர்யம் அடைந்தனர். இன்று பட்டு வேஷ்டி சட்டையில் தலைமைச் செயலகம் வருகை தருவதற்கு அவரது மேலாளர் ஜெகதீஷ் பழனிச்சாமி வீட்டு இல்ல புதுமணை புகுவிழாவே காரணம் என கூறப்படுகிறது.

    Advertisement

    டிரெண்ட் ஆகும் வீடியோ

    சென்னை நீலாங்கரையில் உள்ள ஜெகதீஷ் புதுமணை புகுவிழாவிற்கு விஜய் சென்றுள்ளார். இந்த விழாவிற்காக பட்டு வேஷ்டி சட்டையில் சென்றிருந்த விஜய் அப்படியே நேராக தலைமைச் செயலகம் வருகை தந்ததே காரணம் என்று சொல்லப்படுகிறது. விஜய் தலைமை செயலகத்திற்கு பட்டு வேஷ்டியுடன் வருகை தந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தவெகவினரால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    முதல்வர் விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து கட்சி நிகழ்ச்சிகளுக்கு எங்கு சென்றாலும் வெள்ளை சர்ட், காக்கி பேண்ட் அணிந்து செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தார். முன்னதாக இன்று காலை, சிங்கப்பெண் காவல் படையை முதல்வர் விஜய் தொடங்கி வைப்பார் என்று செய்திகள் வெளியாகின. இதற்கான ஏற்பாடுகள், சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் முழு வீச்சில் செயப்பட்டு வந்தது.

    Advertisement

    சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்க நிகழ்ச்சி

    பெண் காவலர்கள் முழு ஒத்திகையில் நேற்று ஈடுபட்டு இருந்த நிலையில், நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது. தலைமை செயலகத்திற்கு வெளியே முதல்வர் விஜய் பங்கேற்க இருந்த முதல் நிகழ்ச்சி என்பதால், தவெகவினர் இந்த நிகழ்ச்சியை எதிர்பார்த்து இருந்தனர். அதேபோல, பெண்கள் பாதுகாப்பு தொடர்பான திட்டம் என்பதால் பொதுமக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு நிலவியது.

    ஆனால், சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்க நிகழ்ச்சி தள்ளிவைக்கப்படுவதாகவும், வேறொரு நாளில் நடைபெறும் என்றும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

    English Summary

    Vijay: Tamil Nadu Chief Minister Vijay, who has consistently appeared in formal coat-and-suit attire since assuming office, arrived at the Secretariat in traditional silk veshti and shirt for the first time. The change in appearance drew attention among officials and staff. Vijay reportedly visited his manager Jagadish’s housewarming function before heading to the Secretariat.