விஜய்யின் பிரதமர் கனவு.. அதிர்ச்சியில் உறைந்த காங்கிரஸ்! கூட்டணியில் வெடிக்கும் புதிய சர்ச்சை

  • சென்னை: தமிழகத்தில் ஆட்சி அமைத்த சில மாதங்களிலேயே, தவெக தலைவர் விஜய் தேசிய அரசியலை நோக்கி காய் நகர்த்தி வருவது தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கட்சியை 'தேசிய வெற்றி கழகம்' என மாற்றி, 2029 நாடாளுமன்றத் தேர்தலில் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த திட்டங்கள் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகின.

    Advertisement

    இந்த விவகாரம், தமிழகத்தில் தவெகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தமிழக அளவில் தவெக தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கேற்று ஆட்சிக்கு ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில், தேசிய அளவில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி வரும் காங்கிரஸ் தலைமைக்கு, தவெகவின் இந்த திடீர் பிரதமர் புராஜெக்ட் மற்றும் வட இந்திய பி.ஆர் பிரச்சாரங்கள் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளன.

    கூட்டணிக்குள் எழுந்த சலசலப்பு

    தவெக அமைச்சர்கள் சிலர், "அடுத்த பிரதமர் தென்னிந்தியாவிலிருந்துதான் வர வேண்டும்.. விஜய்தான் நாட்டின் அடுத்த பிரதமர்" என வெளிப்படையாகப் பேசத் தொடங்கியபோதே காங்கிரஸ் தரப்பில் சலசலப்பு உருவானது. ஆனால், வட மாநில சமூக வலைதளங்களில் விஜய்க்காக நடத்தப்படும் தீவிர இணையப் பிரச்சாரமும், கட்சியை தேசியக் கட்சியாக மாற்றும் திட்டமும் வெளிச்சத்திற்கு வந்ததும், காங்கிரஸ் தலைவர்கள் தங்களது அதிருப்தியை காட்டத் தொடங்கியுள்ளனர்.

    Advertisement

    தேசிய அளவில் 'இந்தியா' கூட்டணியின் முக்கிய முகமாக ராகுல் காந்தி இருக்கும்போது, தமிழகத்தில் உள்ள தவெக தலைவர்கள் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது எப்படி சரியாகும் என்ற கேள்வி காங்கிரஸ் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

    காங்கிரஸ் தலைவர்களின் ரியாக்ஷன் என்ன?

    இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், தவெக இன்னும் ரசிகர் மன்ற மனநிலையிலேயே செயல்பட்டு வருகிறது என்று விமர்சித்துள்ளார். நாங்கள் பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராக தேசிய அளவில் பெரிய போராட்டத்தை நடத்தி வருகிறோம்.. ஆனால் தவெகவினர் இன்னும் தங்களை ரசிகர் மன்றமாகவே நினைத்துக்கொண்டு இப்படி பேசுகிறார்கள்.. என அவர் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அதேபோல், கார்த்தி சிதம்பரம் போன்ற காங்கிரஸ் எம்பிக்களும், ]யாருக்கு வேண்டுமானாலும் பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கலாம், கனவு காண்பதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களைப் பிடிப்பது மட்டுமே ஒருவரை பிரதமராக்கும்" என்று யதார்த்தத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.

    டெல்லி தலைமையும் தமிழக அரசியலும்

    டெல்லியில் உள்ள காங்கிரஸ் மேலிடமும் இந்த நகர்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிகிறது. தமிழகத்தில் ஆட்சி நிலைத்தன்மைக்காக தவெகவுடன் கைகோர்த்துள்ள காங்கிரஸ், தேசிய அரசியலில் தங்களது முதன்மை தலைவரான ராகுல் காந்தியின் இடத்திற்கு எந்தவித சவாலும் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளது.

    Advertisement

    மாநில அளவில் கூட்டணி அமைத்துவிட்டு, தேசிய அளவில் தனி பாதையை விஜய் தேர்ந்தெடுத்தால், அது கூட்டணி தர்மத்திற்கு முரணானது என்ற வாதமும் காங்கிரஸ் தரப்பில் முன்வைக்கப்படுகிறது. அதே சமயம், தவெகவுக்கு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இல்லாத நிலையில், இப்போதே பிரதமர் வேட்பாளர் பற்றிப் பேசுவது தேவையில்லாத அவசரம் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர்.

    அடுத்து என்ன நடக்கும்?

    விஜய் தரப்பின் இந்த தேசிய அரசியல் ஆசை, தமிழகத்தில் அமைந்துள்ள தவெக - காங்கிரஸ் கூட்டணியின் எதிர்காலத்தை பாதிக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. வெறும் மாநிலக் கட்சியாக மட்டும் இல்லாமல், தென்னிந்தியாவின் உரிமைக் குரலாக விஜய்யை முன்னிறுத்த தவெக திட்டமிடும் அதே வேளையில், தங்களின் தேசிய செல்வாக்கை விட்டுக்கொடுக்க காங்கிரஸ் தயாராக இல்லை.

    Advertisement

    2029 தேர்தலுக்கு இன்னும் காலம் இருந்தாலும், இப்போதே தொடங்கியுள்ள இந்த பிரதமர் பதவி மோதல், வரும் நாட்களில் இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்துமா அல்லது சமரசத்தில் முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English Summary

    CM Vijay as 2029 PM Candidate? Congress Shocked by TVK's National Ambitions