சென்னை: முதல்வர் விஜய் தலைமையில் நடக்கும் முக்கிய தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கலந்து கொள்வாரா? மாட்டாரா? என்கிற கேள்வி அரசின் உயரதிகாரிகள் மத்தியில் பரவியுள்ளது.
தமிழகத்தில் தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக இருந்த ஷகில் அக்தர் மற்றும் ஆணையர்கள் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து கடந்த 3 மாதங்களாக அந்த இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கிறது.
தகவல் ஆணையத்தின் பதவியிடங்களை நிரப்புவதில் மத்திய-மாநில அரசுகள் கால தாமதமாக செயலாற்றுவதும், வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பதும் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு 2018-ல் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 2019-ல், தகவல் ஆணையத்தின் ஆணையர்களின் நியமனங்கள் குறித்த காலத்தில், வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தது. மேலும் இது தொடர்பாக, பல்வேறு உத்தரவுகளையும் மத்திய மாநில அரசுக்குகளுக்குப் பிறப்பித்தது. ஆனால், இந்த உத்தரவுகளை மத்திய-மாநில அரசுகள் நடைமுறைப் படுத்தவில்லை. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை பின்பற்றாத போக்கு களும் நிலவி வந்தன. இது குறித்து மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டு மனுவின் விசாரணை கடந்த 2026, ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 3 மாதம் கால அவகாசம் கேட்ட தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து, 6 வாரங்களுக்குள் தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் உட்பட காலியாக உள்ள ஆணையர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனாலும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி இந்த பணியிடங்களை நிரப்பாமல் தாமதித்து வருகிறது முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு. இதனால், மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகுவது என்றும் அல்லது தவெக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் அறிந்து அதனை முதல்வர் விஜய்யின் கவனத்துக்கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு மாநில தலைமை தகவல் ஆணையர் உள்பட ஆணையர்களை தேர்வு செய்வது தொடர்பாக நாளைக்கு (21-ந்தேதி) முதல்வர் தலைமையிலான கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் நடத்த முதல்வர் அலுவலகம் திட்டமிட்டுள்ளது. இந்த கமிட்டியில் எதிர்க்கட்சி தலைவரின் ரோல் மிக முக்கியமானது. முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து ஒருமுத்த முடிவாக ஆணையர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். அந்த வகையில், தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு தகவல் தரப்பட்டுள்ளதாம். உதயநிதியோ நேற்று முன் தினம் துபாய்க்கு பறந்துள்ளதால், தகவல் ஆணையர்களை தேர்வு செய்யும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வாரா? அல்லது கூட்டத்தை புறக்கணிப்பாரா? என்கிற கேள்வி அதிகாரிகள் மத்தியில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. இதற்கிடையே, எதிர்க்கட்சி தலைவரால் எப்போது கலந்துக் கொள்ள முடியும் என்பதை அறிந்து அதற்கேற்ப ஆலோசனைக் கூட்டத்தை தள்ளி வைக்கலாமா? அப்படி வைப்பதன் மூலம் திமுகவுக்கு எதிராக அரசியல் செய்யலாமே? என்கிற யோசனையும் ஆளும் தரப்பில் பரிசீலிக்கப்படுகிறதாம். - சிறப்பு நிருபர் எழில்இதெல்லாம் நல்லதல்ல.. விஜய் மீது திமுக கவுன்சிலர் விமர்சனம்.. திருமாவளவனுக்கு வந்துச்சே கோபம்