3 எம்எல்ஏக்கள்.. 2 அமைச்சர்கள் மீது ஆக்சன்! நாளை நடக்கும் விஜய் மீட்டிங்.. அஜெண்டா என்ன தெரியுமா?

  • சென்னை: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று சில மாதங்களே கடந்துள்ள சூழலில், அக்கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து கிளம்பியுள்ள தீவிரக் குற்றச்சாட்டுகள் அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.

    Advertisement

    கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாகச் சீர்குலைவை வெளிப்படுத்தும் வகையிலும் எழுந்துள்ள இந்த விவகாரங்களால் தலைமை கடும் அதிருப்தியடைந்துள்ளது.

    Advertisement

    இதன் எதிரொலியாக, சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நாளை (நவம்பர் 11) காலை 11 மணியளவில் கட்சியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்கும் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அதிரடியாக அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில் அனைவரும் எவ்வித விலக்கும் இன்றி கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என திட்டவட்டமாக உத்தரவிடப்பட்டுள்ளது.

    3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 2 அமைச்சர்கள் மீது குறி?

    சமீப நாட்களாக அரசு இயந்திரத்தைக் கேலிக்கூத்தாக்கும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் 3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 2 அமைச்சர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த முதல்வர் விஜய் முடிவெடுத்துள்ளதாக தலைமைச் செயலக மற்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    குற்றச்சாட்டுகள் உறுதியாகும் பட்சத்தில், அவர்கள் வகித்து வரும் அரசுப் பதவிகளைப் பறிக்கவும், கட்சி ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தலைமை தயங்காது என்ற செய்தி கசியத் தொடங்கியுள்ளது. "அதிகாரத் திமிரில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது.. மக்கள் மன்றத்தில் தவெகவின் நேர்மைக்கு களங்கம் விளைவித்தால் பதவி பறிக்கப்படும்" என்ற கடுமையான எச்சரிக்கையை விஜய் விடுக்கவுள்ளார்.

    பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் அத்துமீறிய கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ

    இந்த விவகாரங்களில் முதன்மையானதாக வெடித்துள்ளது கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் மீதான சர்ச்சை. இவர் கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு செல்போனில் தொடர்ந்து தவறான மற்றும் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், நள்ளிரவு நேரத்தில் மதுபோதையில் ஆட்சியரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குச் சென்று ரகளையில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

    Advertisement

    இதனால் அப்பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் பாதுகாப்பைக் கருதி, அரசு தரப்பில் அவருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

    ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வின் இந்த அத்துமீறல் அரசு அதிகாரிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாவட்டத்தின் முதல் நிலை ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வால் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் முதல்வர் விஜய்யை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகின்றன. இதனால் இந்த எம்.எல்.ஏ மீது முதற்கட்டமாக ஒழுங்கு நடவடிக்கை பாயும் எனக் கருதப்படுகிறது.

    குடிநீர் கேட்ட வாக்காளரை தாக்கிய துணை சபாநாயகர் ரவிசங்கர்

    அடுத்ததாக, தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகரும், துறையூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ.வுமான ரவிசங்கர் மீது எழுந்துள்ள நேரடித் தாக்குதல் குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    துறையூர் கண்ணபிரான் காலனியைச் சேர்ந்த கார்த்திக் குமார் என்பவர், தங்கள் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், குப்பைகள் முறையாக அகற்றப்படவில்லை என்றும் முறையிட துணை சபாநாயகரை நேரில் அணுகியுள்ளார்.

    அப்போது வாக்குவாதம் முற்றி, துணை சபாநாயகர் ரவிசங்கர் பொதுவெளியில் கார்த்திக் குமாரைக் காலால் உதைத்தும், கன்னத்தில் அறைந்தும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. "நான் தளபதி விஜய்க்குத்தான் ஓட்டுப் போட்டேன்; தவெகவுக்குத்தான் வாக்களித்தேன்" என்று அந்த நபர் கதறியபோதும் தாக்குதல் தொடர்ந்ததாகக் கூறி வெளியான வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவியது.

    இதன் தொடர்ச்சியாக, கார்த்திக் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் துணை சபாநாயகர் அருகில் அமர்ந்து "கூட்டத்தில் தள்ளுமுள்ளு மட்டுமே நடந்தது, பெரிதாக எதுவும் நடக்கவில்லை" என்று மறுப்பு வீடியோ வெளியிட்டாலும், "என் குடும்பத்தை மிரட்டி, போலீசாரை வைத்து கட்டாயப்படுத்தி அந்த வீடியோவை எடுக்க வைத்தனர்" என்று அவர் மீண்டும் அடுத்த வீடியோ வெளியிட்டு உண்மையை உடைத்தது விவகாரத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

    Advertisement

    ஒரு அரசியலமைப்புப் பதவியில் இருக்கும் துணை சபாநாயகரே அடிப்படை வசதி கேட்ட வாக்காளரை தாக்கியதும், பின்னர் மிரட்டியதும் அரசுக்கு கடுமையான அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.

    அமைச்சர்கள் மீதான அதிகார துஷ்பிரயோகம்

    இவர்கள் தவிர, அமைச்சரவையில் உள்ள இரண்டு முக்கிய அமைச்சர்கள் மீதும் துறை ரீதியான ஒப்பந்த ஒதுக்கீடுகளில் முறைகேடு மற்றும் புகார்கள் தலைமைக்குச் சென்றுள்ளன. நிர்வாகத்தில் தலையிடுவது மட்டுமின்றி, கீழ்மட்ட அதிகாரிகளை மிரட்டிப் பணிய வைப்பதாக வந்த ரகசியப் புலனாய்வு அறிக்கைகளும் முதல்வரின் மேசைக்கு வந்து சேர்ந்துள்ளன. இந்த அமைச்சர்களின் துறைகளை மாற்றுவதா அல்லது அமைச்சரவையில் இருந்தே விடுவிப்பதா என்ற ஆலோசனையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மக்கள் நம்பிக்கையைக் காப்பாற்ற முடிவு?

    தவெக ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் நிறைவடைய உள்ள இந்தத் தருணத்தில், எதிர்க்கட்சிகள் அரசின் சட்டம்-ஒழுங்கு தோல்வியைச் சுட்டிக்காட்டி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மற்றும் போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டு வருகின்றன. மேலும், வரவிருக்கும் இடைத்தேர்தலில் இந்த மக்கள் அதிருப்தி வாக்குகளாக மாறிவிடக்கூடாது என்பதில் முதல்வர் விஜய் உறுதியாக இருக்கிறார்.

    மக்களுக்குச் சேவை செய்யவே அதிகாரம் தரப்பட்டுள்ளது.. அராஜகம் செய்ய அல்ல என்ற நிலைப்பாட்டில் உள்ள விஜய், நாளைய கூட்டத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரதிநிதிகளை நேருக்கு நேர் நிறுத்தி விசாரிக்கவுள்ளார். தவறு செய்தவர்கள் உடனடியாகத் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்ய உத்தரவிடப்படலாம் அல்லது கட்சி ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய அவசர ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் வெளிவரவுள்ள அதிரடி முடிவுகள், தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    CM Vijay Calls Urgent Meeting: Disciplinary Action Likely Against TVK MLAs, Deputy Speaker and Ministers