வடகிழக்கு பருவமழை! சாலையில் ஒரு சொட்டு வெள்ளநீர் தேங்க கூடாது! போய்ட்டே இருக்கணும்! விஜய் உத்தரவு

  • சென்னை: வடகிழக்கு பருவமழைக் காலத்தில் சாலையில் மழை நீர் தேங்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முதல்வர் விஜய், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து செய்தி தொடர்புத் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று (8.9.2026) தலைமைச் செயலகத்தில், வடகிழக்குப் பருவமழையினை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    Advertisement

    இக்கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பருவமழையால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    மேலும், வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும், அனைத்துத் துறை அலுவலர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும், பெருநகர சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை, மாநகராட்சி நிர்வாகம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மீன்வளத்துறை மற்றும் மின்சார வாரியம், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஆகியவை ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    Advertisement

    அத்துடன், மழைநீர் விரைவாக வெளியேறும் வகையில் நீர்நிலைகளில் ஆகாயத்தாமரை அகற்றப்படுவதோடு, கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்களைத் தூர்வாருவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக நிறைவுபெறாமல் இருக்கும் குடிநீர், கழிவுநீர்க் கால்வாய்கள், மற்றும் சாலைப் பணிகளை உடனடியாகச் செய்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

    மேலும், அறுந்து விழக்கூடிய நிலையில் உள்ள மின் கம்பிகள், பலவீனமான மின் கம்பங்கள் ஆகியவற்றை உடனடியாக மின்துறையினர் சீரமைக்க வேண்டுமென்றும், மழைக்காலங்களில் மின் கம்பிகளால் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    Advertisement

    கடந்த காலங்களில் சாலைகளில் வெள்ளநீர் அதிகம் தேங்கிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, வெள்ளநீர் தேங்காதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீர்வழிப் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுவதோடு, மழைக் காலங்களில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் போதிய அளவு மோட்டார் பம்புகள், JCB இயந்திரங்கள், மற்றும் நீர் இறைக்கும் கருவிகளைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    மேலும், நிவாரண முகாம்களைத் தயார் நிலையில் வைத்திருப்பதோடு, அவசியமான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகளை தடையின்றி வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும், தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

    English Summary

    CM Vijay ordered officials in North East monsoon precautionary meeting that roads are to be in good condition. no water stagnant on roads.