2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு!

  • சென்னை: தவெக ஆட்சியமைத்து 2 வாரங்களுக்கு மேல் ஆகியுள்ளது. தமிழக அரசியலில் இன்னும் பரபரப்பு ஓயவில்லை. முதலமைச்சர் விஜய் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். முதலமைச்சராக பதவியேற்ற பிறகு விஜய் முதல்முறையாக டெல்லி செல்கிறார். அவருடன் அமைச்சர்கள், அதிகாரிகளும் பயணம் செய்யவுள்ளனர். இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். அப்போது தமிழகத்திற்கான பல்வேறு திட்டங்கள், பிரச்சனைகள் ஆகியவை குறித்து ஆலோசனை செய்யவுள்ளனர்.

    Advertisement

    சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைத்துள்ளது. தவெக ஆட்சிக்கு வந்த 2 வாரங்களிலேயே அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 200 யூனிட் மின்சாரம், விவசாயிகளுக்கான பயிர் கடன் தள்ளுபடி ஆகியவற்றில் தேர்தல் வாக்குறுதிபடி செயல்படவில்லை என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

    Advertisement

    விஜய்யின் முதல் டெல்லி பயணம்

    அரசியல் ரீதியாகவும் தவெக செயல்பாடு பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. கூட்டணி கட்சிகள் ஆதரவு, அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவது என்று அடுத்தடுத்து அரசியலில் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதலமைச்சர் விஜய் இன்று காலை 10 மணியளவில், சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுள்ளார்.

    முதலமைச்சராக பதவியேற்ற பிறகு விஜய் முதல்முறையாக டெல்லி செல்கிறார். அவருடன் அமைச்சர்கள், அதிகாரிகளும் பயணம் செய்துள்ளனர். உள்துறை செயலாளர் மூலம் இந்தப் பயணம் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. முதல்முறையாக தமிழ்நாடு இல்லம் செல்லும் விஜய்க்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு கொடுக்கப்படவுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை விஜய் திறந்து வைக்கவுள்ளார்.

    Advertisement

    மோடியுடன் சந்திப்பு

    அதனை தொடர்ந்து இன்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் விஜய் சந்திக்கவுள்ளார். அப்போது தமிழகத்திற்கான பல்வேறு திட்டங்கள், பிரச்சனைகள், நிதி ஒதுக்கீடு, பி.எம் ஶ்ரீ திட்டம், மேகதாது அணை ஆகியவை குறித்து ஆலோசனை செய்யவுள்ளனர். விஜய் சார்பில் மோடியிடம் மனு அளிக்கப்படவுள்ளது.

    இந்த சந்திப்பின்போது தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், அமைச்சர்கள் உடனிருப்பார்கள். மோடியுடனான சந்திப்புக்கு பிறகு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் விஜய் சந்திக்க திட்டமிட்டுள்ளார். விஜயின் டெல்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    English Summary

    CM Vijay: Today Chief Minister Joseph Vijay to travel for the first time for Delhi after Taking CM post. He will Meet Prime Minister Narendra Modi on the evening.