Prison break: சிறை பாதுகாப்பை உறுதி செய்ய ஜேகே திரிபாதி தலைமையில் குழு அமைத்து விஜய் உத்தரவு!

  • சென்னை: தமிழ்நாட்டில் சிறைச்சாலைகளின் சிறைகளின் பாதுகாப்பை ஆய்வு செய்து, அதன் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை அரசுக்கு வழங்க ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜே.கே திரிபாதி தலைமையில் குழு அமைத்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement

    தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் இரவு நேரத்தில் தப்பி ஓடிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மூன்றாவது பிளாக்கில் இருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களை தாக்கி பிரதான நுழைவுவாயிலைத் திறந்து 17 கைதிகள் தப்பிச் சென்றனர். அவர்களில் ஒரு மாற்றுத்திறனாளியும் அடக்கம். தப்பி ஓடிய கைதிகள் நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு பிடிபட்டனர்.

    Advertisement

    முன்னதாக, சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து கடந்த வாரம் 2 கைதிகள் தப்பினர். நேபாள நாட்டைச் சேர்ந்த விசாரணைக் கைதி. மற்றொருவர் தண்டனைக் கைதி. நேபாள நாட்டைச் சேர்ந்த கைதி, சி.சி.டி.வி கேமரா வயரைப் பிடித்துக்கொண்டு சுமார் 40 அடி உயரமுள்ள சுவரில் ஏறிக் குதித்துத் தப்பிச் சென்றுள்ளார். அவர்களை அடுத்தடுத்த நாட்களில் போலீசார் தீவிரமாகத் தேடி மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    தமிழ்நாடு முழுவதும் சிறைகளில் இருந்து கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் நிகழ்ந்து வருவது சிறையின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பி உள்ளன. இந்நிலையில், தமிழ்நாட்டில் சிறைச்சாலைகளின் பாதுகாப்பை ஆய்வு செய்ய உயர்நிலைக் குழு அமைக்க தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "அண்மையில் தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் சிறைச்சாலைகளில் நிலவும் பாதுகாப்பு நிலைமை குறித்து முதல்வர் ச. ஜோசப் விஜய், ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது பெறப்பட்ட கருத்துகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில், தமிழ்நாட்டில் அண்மையில் கைதிகள் தப்பிச் சென்ற சம்பவங்களுக்கு காரணமான பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கவும், நாட்டின் பிற பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உயர்நிலைக் குழு ஒன்றை அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement

    இந்த உயர்நிலைக் குழுவிற்கு, தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் J.K. திரிபாதி, (ஓய்வு) தலைவராகவும், கூடுதல் காவல்துறை தலைவர்/ சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் தலைமை இயக்குநர் K. சங்கர், மற்றும் சிறைத் துறையின் முன்னாள் துணைத் தலைவர் S. ராஜேந்திரன் (ஓய்வு) ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள்.

    இந்த உயர்நிலைக் குழு, தமிழ்நாட்டில் கைதிகள் தப்பிச் சென்ற சம்பவங்களுக்கு வழிவகுத்த பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், தற்போதுள்ள பாதுகாப்பு கட்டமைப்பு, சிறையின் பாதுகாப்பிற்கு அவ்வப்போது பிறப்பிக்கப்படும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை ஆய்வு செய்யவும், தொழில்நுட்ப இடைவெளிகள் மற்றும் தற்போதைய பணிச்சுமைக்கேற்ப போதுமான அளவில் பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்தும், ஆய்வு செய்யும்.

    Advertisement

    மேலும், நாட்டின் பிற பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில், மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான விரிவான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும். இக்குழு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை விரைவில் அரசுக்கு சமர்ப்பிக்கும்.

    சிறைச்சாலைகளின் பாதுகாப்பு போர்க்கால அடிப்படையில் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், பணியில் கவனக்குறைவாக செயல்படும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Chief Minister Vijay has constituted a committee, headed by retired IPS officer J.K. Tripathy, to examine the security of prisons in Tamil Nadu and provide recommendations to the government for strengthening it.