காங்கிரஸ் உடனான மோதலை ரசிக்கும் விஜய்? அமைச்சர்களின் 'பிரதமர்' பேச்சுக்கு கடிவாளம் போடாதது ஏன்?

  • சென்னை: தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள் மட்டுமே நிறைவடைந்துள்ள சூழலில், ஆளுங்கூட்டணியில் உள்ள தவெகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையேயான அரசியல் இடைவெளி நாளுக்கு நாள் பகிரங்கமாக விரிவடைந்து வருகிறது. தவெக அமைச்சர்கள் தொடர்ந்து விஜய்யை நாட்டின் அடுத்த பிரதமர் எனப் பேசி வருவதும், அதற்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து கடுமையான எதிர்வினைகள் எழுவதும் தமிழக அரசியலில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது.

    Advertisement

    ஆனால், இந்தக் கூட்டணி முரண்பாட்டைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தவெக மற்றும் காங்கிரஸ் இடையேயான இந்த அரசியல் மோதலை முதலமைச்சர் விஜய் உள்ளூர ரசிக்கிறாரா என்ற கேள்வியும் தற்போது எழத் தொடங்கியுள்ளது.

    Advertisement

    அமைச்சர்களுக்கு கடிவாளம் போடாத விஜய்!

    எந்தவொரு அரசியல் கட்சிக்கும் பிரதமர் ஆசை இருப்பதிலோ அல்லது தங்களது தலைவரை தேசிய அளவுக்கு முன்னிறுத்துவதிலோ எந்தத் தவறும் இருக்க முடியாது. ஆனால், தற்போது தமிழகத்தில் அமைந்துள்ள தவெக அரசு என்பது தனிப் பெரும்பான்மை கொண்ட ஆட்சி அல்ல; மாறாக காங்கிரஸின் ஆதரவை நம்பியே இயங்கி வரும் ஒரு கூட்டணி அரசு. இத்தகைய சூழலில், அரசைத் தாங்கிப் பிடிக்கும் முக்கிய கூட்டணிக் கட்சியான காங்கிரஸை உரசிப் பார்க்கும் வகையில் அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வருவது இயல்பாகவே பெரும் உராய்வை உருவாக்கியுள்ளது.

    Advertisement

    இந்த விவகாரம் கூட்டணியில் பூதாகரமாக வெடித்த பின்னரும், பொதுவெளியில் பேசி வரும் அமைச்சர்களுக்கு விஜய் இதுவரை எந்தவொரு 'வாய்ப்பூட்டு' உத்தரவையும் (Gag Order) போடவில்லை. அமைச்சர்களின் இந்தப் பேச்சை விஜய் வெளிப்படையாகக் கண்டிக்கவோ அல்லது மறுக்கவோ செய்யாமல் மௌனம் காப்பது, இந்த மோதல் போக்கை அவர் விரும்பியே அனுமதிக்கிறாரோ என்ற எண்ணத்தை அரசியல் பார்வையாளர்களிடையே வலுப்படுத்தியுள்ளது.

    150+ இடங்கள் இருந்திருந்தால் நிலைமை வேறு!

    சட்டமன்றத் தேர்தலில் தவெக தனித்து 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி, சொந்த பலத்தில் தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்திருந்தால், விஜய் பிரதமர் வேட்பாளர் என்ற முழக்கம் இவ்வளவு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்காது. அத்தகைய பெரும்பான்மை பலம் இருந்தாலும்கூட, தேசிய அளவில் ஒரு தெளிவான அரசியல் நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கும்.

    Advertisement

    2014-ல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா துணிச்சலாக "குஜராத் மோடியா... தமிழ்நாட்டின் இந்த லேடியா?" என்று நேரடியாக நரேந்திர மோடிக்கு எதிராக களம் கண்டு, மாநிலம் முழுவதும் தனித்துப் போட்டியிட்டு 37 நாடாளுமன்ற இடங்களை அள்ளினார். ஆனால், மத்தியில் பாஜகவுடன் ஒரு இணக்கமான சமரசப் போக்கைக் கடைப்பிடித்த ஒடிசாவின் நவீன் பட்நாயக் அல்லது ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி போன்ற தலைவர்களின் பாணியை தவெக பின்பற்றப் போகிறதா அல்லது ஜெயலலிதாவைப் போல துணிச்சலான நிலைப்பாட்டை எடுக்கப் போகிறதா என்பதில் தெளிவு இல்லை.

    மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அவசரமா?

    அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் முழுமையாக மூன்று ஆண்டுகள் எஞ்சியுள்ளன. 2029 தேர்தலுக்கு இவ்வளவு முன்கூட்டியே பிரதமர் வேட்பாளர் விவாதத்தைக் கிளப்புவது, அந்த தேசிய லட்சியத்தை வலுப்படுத்துவதற்குப் பதிலாக அதன் வீரியத்தைக் குறைத்துவிடும் (Dilute) என்ற எச்சரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.

    Advertisement

    தற்போது தவெக எடுத்துள்ள இந்த அவசர நகர்வு, தேசிய அளவிலான முக்கியத்துவத்தைப் பெறுவதை விட, தமிழகத்தில் ஆளும் கூட்டணிக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இடைவெளி மேலும் அதிகரிக்கும்!

    குறைந்தபட்சம், கூட்டணி தர்மத்தை மதித்து அமைச்சர்களின் இத்தகைய பொதுப் பேச்சுகளுக்கு விஜய் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால், தவெக மற்றும் காங்கிரஸுக்கு இடையேயான அரசியல் பிளவு இன்னும் பலமடங்கு அதிகரிக்கும்.

    ஆட்சிக்கு வந்த 100 நாட்களிலேயே கூட்டணிக் கட்சியை சீண்டிப் பார்க்கும் இந்த மோதல் போக்கு, தவெக அரசின் ஸ்திரத்தன்மைக்கே வினையாக மாறுமா அல்லது விஜய்யின் தேசிய திட்டத்திற்கு வித்திடுமா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

    English Summary

    CM Vijay Enjoys TVK-Congress Rift? Why No Gag Order on Ministers’ 2029 PM Pitch Sparks Speculation