பஸ்ல டிராவல் பண்ணனும்னு எனக்கு கனவுப்பா! இப்போ நிறைவேறிடுச்சி! 29ஏ கண்டக்டரிடம் விஜய் மகிழ்ச்சி

  • சென்னை: பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற கனவு நிறைவேறிவிட்டதாக முதல்வர் விஜய் மகிழ்ச்சியாக தெரிவித்ததாக அரசு பேருந்து கண்டக்டர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    127.21 கோடி ரூபாய் செலவில் 300 புதிய பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய். சென்னை உட்பட 6 கோட்டங்களில் 164 டீசல் பேருந்துகள், 134 சிஎன்ஜி பேருந்துகள் என மொத்தம் 300 பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. கொடியசைத்து பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர் விஜய், எழும்பூர் செல்லும் 29ஏ பேருந்தில் ஏறி ஓட்டுநர், நடத்துனருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    Advertisement

    அவர் சிறிது தூரம் பேருந்தில் பயணித்துவிட்டு மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு சென்றார். பேருந்தில் பயணம் செய்த போது வழிநெடுகிலும் பொதுமக்களுக்கு கையசைத்த வண்ணம் இருந்தார். மேலும் நடத்துநர், பேருந்து ஓட்டுநரிடம் விஜய் கலகலப்பாக பேசினார்.

    இதுகுறித்து நடத்துநர் சாமுவேல் பேசுகையில், நான் 12 ஆண்டுகளாக போக்குவரத்து துறையில் உள்ளேன். முதல்வர் விஜய் பேருந்தில் பயணம் செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. 300 பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்திருக்கிறார்.

    இந்த பேருந்தில் நிறைய புதிய சிஸ்டம் அறிமுகப்படுத்தியுள்ளார்கள். முதல்வர் விஜய் என்னிடம் நன்றாக பணியாற்றுமாறு தெரிவித்திருந்தார். விஜய் மட்டுமில்லை, அவருடன் பயணித்த எல்லாருமே டிக்கெட் எடுத்துக் கொண்டு பயணித்தனர். 15 பேருக்கு டிக்கெட் வாங்கினாங்க!

    Advertisement

    பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என விஜய் சொன்னார். இவ்வாறு நடத்துநர் தெரிவித்தார்.

    அது போல் பேருந்தின் டிரைவர் டில்லி பாபு கூறியிருப்பதாவது: "என் பெயர் என்ன என விஜய் கேட்டார். பிறகு அவர் இருக்கையில் அமர்ந்தார். ஃபர்ஸ்ட் அவர் ஏறும்போது பதட்டமா இருந்தது. அப்ப ஏறுன பிறகு உட்கார்ந்த பிறகும் சந்தோஷமா ஆயிடுச்சு.

    கண்ணாடிய ரொம்ப தூரம் லாங்ல இருந்து பாத்துருக்கேன் இதுவரைக்கும் கிட்டத்துல அவ்ளோ பார்த்ததே இல்லை. இன்னைக்குதான் ஃபர்ஸ்ட் டைம் கிட்டத்துல பாத்துருக்கேன்.

    இந்த பஸ்ல பயணிகளுக்கு ஏதாவது ஒன்று என்றால் கால் செய்யும் சிஸ்டம் உள்ளது. வண்டி கம்பர்டபிளா இருக்கான்னு கேட்டார். இருக்கு சார், சூப்பரா இருக்கு சார் என்றேன். இவ்வாறு டிரைவர் தெரிவித்தார்.

    Advertisement

    இந்த பேருந்து தொடக்கம் குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ரூ.127.21 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் 300 புதிய பேருந்துகளின் சேவை தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்கள்.

    தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று (25.6.2026) தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை சார்பில் 127 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் 300 புதிய பேருந்துகளின் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்கள்.

    Advertisement

    தமிழ்நாடு அரசு, 8 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக, கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், வணிகம், சமூக மற்றும் பிற தேவைகளுக்காக மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை வழங்கி வருகிறது. இப்போக்குவரத்துக் கழகங்களின் 26 மண்டலங்கள் மற்றும் 317 பணிமனைகளின் வாயிலாக இயக்கப்படும் சுமார் 21,527 பேருந்துகளின் மூலம் தினசரி சுமார் 2.05 கோடி பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இதில் சுமார் 64 சதவீதம் பேர் மகளிர், மாணவர்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், விடுதலைப் போராட்ட வீரர்கள், கலைமாமணி விருதாளர்கள், பிற தகுதிவாய்ந்த பயனாளிகள் கட்டணமில்லா பயணச் சலுகையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

    Advertisement

    பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்துதல், முன்பு நிறுத்தப்பட்ட பகுதிகளில் மீண்டும் பேருந்து சேவைகளை இயக்குதல், பழைய பேருந்துகளை மாற்றுதல், பணிமனைகள் மற்றும் பயணிகள் வசதிகளை மேம்படுத்துதல், வாகனங்களின் தகுதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துதல், தொழில்நுட்ப அடிப்படையிலான பயணிகளின் சேவைகளை விரிவுபடுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

    தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் 17.06.2026 அன்று நடைபெற்ற போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தின்போது, போக்குவரத்துத் துறையை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மாசற்ற, நவீன, தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய, பாதுகாப்பான மற்றும் பயணிகள் பயன்பெறும் வகையிலான பொதுப் போக்குவரத்து அமைப்பாக மேம்படுத்த வேண்டும் என்றும், ஸ்மார்ட் கார்டு அடிப்படையிலான முறையின் மூலம் டிஜிட்டல் கட்டண வசூல், GPS / Vehicle Location Tracking, பயணிகள் தகவல் அமைப்புகள், பேருந்து நிலையங்களில் 24x7 பயணிகள் உதவி மையங்கள் போன்றவற்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

    அதன்படி, பொதுப் போக்குவரத்து சேவைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 65 பேருந்துகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்திற்கு 36 பேருந்துகள், சேலம் கோட்டத்திற்கு 39 பேருந்துகள், கோயம்புத்தூர் கோட்டத்திற்கு 25 பேருந்துகள், கும்பகோணம் கோட்டத்திற்கு 49 பேருந்துகள், மதுரை கோட்டத்திற்கு 42 பேருந்துகள் மற்றும் திருநெல்வேலி கோட்டத்திற்கு 44 பேருந்துகள் என மொத்தம் 300 புதிய பேருந்துகளின் சேவையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்கள்.

    இப்பேருந்துகளில் 164 டீசல் பேருந்துகளும், BS VI இணக்கமான, குறைந்த மாசு உமிழ்வு கொண்ட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற 136 CNG பேருந்துகளும் அடங்கும். இப்புதிய பேருந்துகள் நகர மற்றும் புறநகர் பேருந்து சேவைகளை வலுப்படுத்தி, பயணிகளுக்கான தொடர் சேவையை மேம்படுத்தி, பயணிகள் காத்திருப்பு நேரத்தைக் குறைத்து, பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்திற்கு வகைசெய்யும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    English Summary

    A government bus conductor stated that Chief Minister Vijay happily shared that his long-held wish of traveling on a government bus had finally come true.