இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி

  • தமிழ்நாட்டின் வாழ்வாதாரமாகவும், டெல்டா மாவட்ட விவசாயிகளின் உயிர்நாடியாகவும் விளங்கும் காவிரி நீர் விவகாரத்தில், விஜய் தலைமையிலான அரசுக்கு மிகப்பெரிய பிரச்சனை வெடித்துள்ளது. ஜூன் 12 ஆம் தேதியான இன்று, தமிழ்நாட்டின் மரபுப்படி குறுவைச் சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டிய மிக முக்கிய நாளாகும்.

    Advertisement

    ஆனால், மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் இன்று பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்படாமல் மேட்டூர் அணை முழுமையாக முடங்கியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் எதிர்க்கட்சியான திமுக, காவிரித் தண்ணீருக்கு வழி செய்யாமல் குறுவை தொகுப்பு திட்டத்தை முதல்வர் விஜய் அறிவித்து வருவதாக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.

    Advertisement

    மேட்டூர் அணை

    மேட்டூர் அணை திறக்கப்படாத விவகாரம் குறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் முதல்வர் விஜய்க்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. "ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுவது போல, பாசனத்திற்குத் தண்ணீருக்கே வழி செய்யாமல் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவைச் சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை அறிவிப்பது எந்த வகையில் நியாயம்?" என்று திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

    கடந்த ஐந்து ஆண்டுகளில் இதே ஜூன் 12 ஆம் நாளில், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களை முன்கூட்டியே தூர்வாரி, கடைமடை வரை தண்ணீர் பாய்வதை உறுதி செய்து மேட்டூர் அணையைத் திறந்து வைப்பார் என்று திமுக சுட்டிக்காட்டியுள்ளது.

    Advertisement

    19 டிஎம்சி பாக்கி - கர்நாடக காங்கிரஸிடம் பேசுவாரா விஜய்?

    காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படியும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கடுமையான வலியுறுத்தலின்படியும் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 19 டிஎம்சி (TMC) தண்ணீரை கர்நாடக அரசு இதுவரை வழங்காமல் பிடிவாதம் காட்டி வருகிறது. தற்போதைய சூழலில் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) ரகசிய உறவிலும், தற்போதைய நாடாளுமன்றச் கூட்டணியிலும் இருக்கும் அதே காங்கிரஸ் கட்சிதான் கர்நாடகாவில் ஆட்சி செய்கிறது. டெல்லி வரை சென்று அரசியல் உறவுகளைக் கொண்டாடிவிட்டு, தற்போது தனது சொந்த வேண்டுதலுக்காகக் கர்நாடகா கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்றுள்ள முதல்வர் விஜய், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதார வேண்டுதலையும் மனதில் கொண்டு அங்கு ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசுடன் பேசி 19 டிஎம்சி காவிரித் தண்ணீரை முறைப்படி கொண்டு வருவாரா, இல்லை விவசாயிகளின் வயிற்றில் அடிக்கப் போகிறாரா என்று திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

    Advertisement

    குறுவைச் சிறப்புத் தொகுப்புத் திட்டம்

    இத்தகைய சூழ்நிலைக்கு மத்தியில் தான், தமிழக அரசு சார்பில் புதிய குறுவைச் சிறப்புத் தொகுப்புத் திட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை, கார் மற்றும் சொர்ணவாரிப் பருவங்களில் மேற்கொள்ளப்படும் நெல் சாகுபடியை எப்படியாவது ஊக்குவித்து, நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் 2026 ஆம் ஆண்டிற்கான இந்த ரூ.134.83 கோடி மதிப்பீட்டிலான திட்டம் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    இந்தக் குறுவைச் சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து அரசு உதவிகளையும், சலுகைகளையும் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் முழுமையாகப் பெற்றுப் பயனடைய வேண்டும் என்று முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் விவசாயத் துறையில் அடுத்தடுத்து எழுந்து வரும் உள்கட்டமைப்புச் சிக்கல்களில் மாட்டிக்கொண்டுள்ள தற்போதைய அரசு, இந்த மாதாந்திர நிதியுதவி மற்றும் தொகுப்புத் திட்டங்கள் மூலம் விவசாயிகளைக் காக்க முற்பட்டாலும், பயிர்கள் கருகாமல் இருக்கக் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதுதான் ஒரே நிரந்தரத் தீர்வாகும்.

    English Summary

    Tamil Nadu Chief Minister Vijay is facing sharp criticism from DMK for announcing a ₹134.83 crore Kuruvai special package while the Mettur dam remains closed due to water shortage on the traditional June 12 opening day. The opposition questions why water release from Karnataka is not prioritized despite Vijay's Delhi visit and Congress alliance.