சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை பேச அனுமதிக்க கோரி சபாநாயகர் இருக்கைக்கு முன்பு திமுக எம்எல்ஏக்கள் அமர்ந்து கொண்டு தர்ணாவில் ஈடுபட்ட போது எழுந்திருக்க முயன்ற துரை சந்திரசேகர் எம்எல்ஏ விழவிருந்த நிலையில் அவருக்கு முதல்வர் விஜய் கை கொடுத்து தூக்கிவிட்டார்.
தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் பேசுகையில், நமது அரசு யாருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாளமாக எப்பவுமே இருக்காது. நமது அரசின் அடையாளம், தமிழ், தமிழர், தமிழ்நாடு அவ்வளவுதான். தமிழ்நாடுதான் என் வீடு, எட்டு கோடி பேர் மக்கள்தான் என் சொந்தங்கள். அந்த 8 கோடி பேருக்கும் சொந்தமான அடையாளமாகத்தான் நம்ம அரசு எப்பவுமே இருக்கும்.
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவோம். தமிழக மக்கள் நலம் ஒன்றேதான் கருத்தில் கொள்வோம். மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தொட மாட்டோம், தொட்டவர்களையும் விடமாட்டோம். கடந்த வாரம் சட்டசபையில் பேசிய போது என் டேபிளில் 3 ஃபைல்கள் இருக்கு, அதை எப்போது ஓபன் செய்ய வேண்டுமோ அப்போது செய்வேன் என சொன்னேன். ஆனால் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் இப்போதே ஓபன் செய்யட்டும் என சவால் விட்டார்கள். 1970 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் சத்யநாராயணா பிரதர்ஸ்னு ஒரு கம்பெனிக்கு வீராணம் திட்டத்திற்கான குழாய்கள் தயாரிக்கிற டெண்டர் கொடுத்த விவகாரம் பற்றி சர்காரியா கமிஷன் இறுதி அறிக்கை இருக்கிறது. அதில் டெண்டர் வேண்டும் என்றால் 2 சதவீத கமிஷன் தர வேண்டும் என கருணாநிதியின் மருமகன் மாறன் கேட்டாராம். 16 கோடி ரூபாய் டென்டரில் 2 சதவீதம் கமிஷன் என்றால் 40 லட்சம் ரூபாய் கமிஷன்! 1970 முதல் 1974 வரை தவணையாக 29 லட்ச ரூபாயை லஞ்சமாக பெற்றனர். எனக்கு கருணாநிதி மேல தனி மரியாதை இருக்கிறது இதெல்லாம் எங்களுடயை குற்றச்சாட்டு இல்லை, அந்த அறிக்கையில் இருப்பதைதான் படித்திருக்கிறேன். இவ்வாறு விஜய், திமுக மீதும் பார்ட்டி பண்ட் மீதும் பேசி கொண்டே இருந்த போது திமுகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுந்து நின்றனர். அப்போது திமுக மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க கேட்டனர். சபாநாயகரோ முதல்வர் பேசியதும் தருவதாக தெரிவித்திருந்தாராம். ஆனால் முதல்வர் பேசி முடித்ததும் விளக்கம் அளித்த திமுகவினர் கேட்ட போது சபாநாயகர் மறுத்துவிட்டார். சபாநாயகர் கூறுகையில், முதல்வர் பேசவில்லை பேசவில்லை என்கிறீர்கள், அவர் பேசும் போது அமைதியாக கேட்டிருக்க வேண்டும். அவர் பேசி முடித்த பின்னர் உங்களுக்கு பதில் அளிக்க அவகாசம் கொடுத்திருப்பேன். ஆனால் அவர் பேசுவது மக்களுக்கு போய் சேர கூடாது என்பதிலேயே திமுகவினர் குறியாக இருந்து கூச்சல் குழப்பங்களில் ஈடுபட்டனர். எனவே அவர்கள் பேச வாய்ப்பு அளிக்க முடியாது. என்னை மிரட்டினாலும் உருட்டினாலும் நான் அனுமதி தர மாட்டேன். என்னை யாரும் நிர்பந்திக்க முடியாது என்றார். அப்போது திமுக எம்எல்ஏக்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தங்களை பேச அனுமதிக்குமாறு வசந்தன் கார்த்திகேயன், முதல்வர் விஜய்யிடம் சிரித்தபடியே கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது சபாநாயகர், நான் அனுமதிக்க மாட்டேன், நீங்களாக வெளியே செல்ல வேண்டும் என்றால் செல்லுங்கள், இல்லாவிட்டால் அவைக் காவலர்களை வைத்து வெளியேற்றப்படுவீர்கள் என்றார். அப்போது திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து அவை மைய பகுதியில் அமர்ந்திருந்த எம்எல்ஏக்கள் எழுந்த போது துரை சந்திரசேகரனும் எழுந்தார். அப்போது அவர் தவறி விழ இருந்தார், உடனே முதல்வர் விஜய் அவரை கை கொடுத்து தூக்கிவிட்டார். இதை தவெகவினர் கைதட்டி வரவேற்றனர்.