சென்னை: தமிழக சட்டப் பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் ஜோசப் விஜய் பதிலுரை அளித்தார். அப்போது, திமுகவுக்கு வாக்களிக்காத மக்களுக்கு "நல்ல சாவே வராது" என்று திமுக உறுப்பினர் பேசியதை சுட்டிக்காட்டிய விஜய், கடந்த 50 வருடமாக இதே மக்கள் தானே திமுகவுக்கு வாக்களித்துக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து இதுபோன்று சொல்வதற்கு எப்படி வார்த்தை வருகிறது என்று விஜய் காட்டமாக கேள்வி எழுப்பினார்.
தமிழக சட்டமன்றம் 3 நாட்களுக்குப் பிறகு கூடியுள்ளது. சட்டம் ஒழுங்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை முன் வைத்துள்ள நிலையில், தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் பதிலுரை அளித்து வருகிறார். அப்போது அவர் பேசியதாவது: தமிழக முதல்வராக பதவியேற்ற நாள் முதல் ஊழலற்ற நிர்வாகம் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இளம் வயதினர் குற்றங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு குறித்து பேசும் எதிர்க் கட்சியினருக்கு, கடந்த 2021 - 2025 ஆம் ஆண்டு கால குற்றங்களை பட்டியலிட்டுவிட்டுச் சென்றுவிட எனக்கு விருப்பம் இல்லை. அரசியல் ரீதியாக எந்தக் கருத்துகளையும் கூறலாம். ஆனால் தனிப்பட்ட தாக்குதல்களைப் பேசக் கூடாது. சில நாட்களுக்கு முன்பு உறுப்பினர் ஒருவர் பேசுகையில், ஆர்த்தோ சர்ஜன் போல சட்ட சபைக்குள்ளேயே எலும்பை உடைப்பாராம். இதுபோன்ற பேச்சுகள் எதற்கு. இப்படி பேசுவது தான் அரசியலா?. இப்படிப் பேசி பேசித்தான் இன்று அந்தப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று பேசினார். அப்போது, திமுகவினருக்கு அட்வைஸ் செய்ய வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பினர். அப்போது, அறிவுரை கூற நான் வரவில்லை இதுதான் நிதர்சனம் என்று முதல்வர் விஜய் பதிலளித்தார். தொடரந்து பேசிய முதல்வர், இன்னொரு மூத்த சட்டப்பேரவை உறுப்பினர் கூறுகிறார், மக்கள் அவர்கள் கட்சிக்கு ஓட்டு போடாததால் திமுகவுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவே வராது என்று கூறுகிறார். கடந்த 50 வருடமாக இதே மக்கள் தான் அவர்கள் வாக்களித்துக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து இதுபோன்று சொல்வதற்கு எப்படி வார்த்தை வருகிறது என்று நினைத்து பார்க்கவே முடியவில்லை. மக்களின் தீர்ப்பை ஏற்க முடியாத மனம் எப்போது இல்லையோ, நீங்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும் என்ற கேள்வி தானே வருகிறது. மக்கள் தீர்ப்பை சிறிதளவாவது மதிக்க வேண்டும் என்று கூறினார். இதனால், சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இதுகுறித்து கேட்டால் நாங்கள் அந்தக் காலத்தில் பேசாத பேச்சா என்று கேட்கிறார்கள். தாங்கள் பேசுவது, செய்வது தவறு என்று தெரியாமலேயே பேசுகின்றனர் என்று கூறினார்.எலும்பை உடைப்பாராம்
எப்படி இப்படி பேசுறீங்க..