“பெண்கள்தான் அதிகம் வாக்களித்தனர்.. நன்றி, விசுவாசத்துடன் இங்கு நின்று பேசுகிறேன்” - விஜய் பேச்சு

  • சென்னை: "தமிழகத்தின் பெண்களுக்காக பேசுகிறேன். தமிழ்நாட்டில் பெண் ஆளுமைகள் நிறைய பேர் உள்ளனர். எனது நிலைக்கு அம்மா, அக்கா, தங்கை, பாட்டிகள் தான் காரணம். பெண்களுக்கு சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்." என தமிழக சட்டசபையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக தனி தீர்மானம் கொண்டு வந்து பேசியுள்ளார் முதல்வர் விஜய்.

    Advertisement

    தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் அமர்வு இன்று தொடங்கியதும், மத்திய அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை கொண்டு வந்து உரையாற்றினார் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்.

    Advertisement

    முதல்வர் விஜய் பேசுகையில், "நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும், தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் இடங்களின் எண்ணிக்கையை மாநிலங்களுக்கிடையே அதாவது விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.

    வரவிருக்கும் மக்களவை பொதுத்தேர்தலிலும், அதன் பிறகு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனைப் பெண்கள் பெறுவதை உறுதி செய்யவேண்டும்." என மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் ஜோசப் விஜய் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

    மேலும் பேசிய முதல்வர் விஜய், "தமிழகத்தின் பெண்களுக்காக பேசுகிறேன். தமிழ்நாட்டில் பெண் ஆளுமைகள் நிறைய பேர் உள்ளனர். எனது நிலைக்கு அம்மா, அக்கா, தங்கை, பாட்டிகள் தான் காரணம். தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் வாக்களித்தனர். நன்றி, விசுவாசத்துடன் இங்கு நின்று பேசுகிறேன்.

    Advertisement

    பெண்களுக்கு சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். 2021 சட்டசபையில் 12 பெண் உறுப்பினர்கள் இருந்தார்கள். 2026 சட்டசபையில் 23 பெண்கள் இருக்கிறார்கள். 4 பெண்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.

    சுதந்திரப் போராட்டத்தில் இருந்து சமூகநீதி போராட்டம் வரை கலந்துகொண்டவர்கள் நம் தமிழ்நாட்டுப் பெண்கள். அது மட்டுமா? கல்வி, அறிவியல், அரசியல், நீதி, நிர்வாகம், தொழில்நுட்பம் என எல்லா துறைகளிலும் இன்று நம் தமிழ்நாட்டுப் பெண்களின் பங்களிப்பு பெரியது என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட நம் வீட்டுப் பெண்கள் அரசியலிலும் முன்னேற வழிவகை செய்ய வேண்டும். அதற்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    Advertisement

    பெண்களுக்கான இடஒதுக்கீடு சலுகை கிடையாது. அது ஒரு சமூக நீதி சார்ந்தது. மகளிருக்கான 33% இடதுக்கீட்டை இனியும் தாமதிக்காமல் செயல்படுத்த வேண்டும். நாட்டின் மக்கள் தொகையில் பாதி பேர் பெண்கள். பெண்களுக்கு சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்" எனப் பேசியுள்ளார் விஜய்.

    முதல்வர் ஜோசப் விஜய் தனித் தீர்மானத்தை முன்மொழிந்ததைத் தொடர்ந்து, தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. திமுக, அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் இதன் மீது உரையாற்றினர்.

    English Summary

    “I speak for the women of Tamil Nadu. There are many women of stature in the state. My mother, sisters, and grandmothers are the reason I am where I am today. Women must be accorded equal status,” said Chief Minister Vijay while moving a special resolution regarding constituency delimitation in the Tamil Nadu Assembly.