சென்னை: தமிழக அரசியல் களம் தற்போது அரசு பங்களாக்களைச் சுற்றி ஒரு பரபரப்பான விவாத மேடையாக மாறியிருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், புதிய அமைச்சர்களுக்கான பங்களா ஒதுக்கீட்டில் பெரும் இழுபறி நீடித்து வருகிறது.
கடந்த திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த பல மாஜிக்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாக்களை இன்னும் காலி செய்யாமல் ஆக்கிரமித்து வைத்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. புதிய ஆட்சி அமைந்தும் பங்களாக்களை காலி செய்ய அவர்கள் தொடர்ந்து மறுத்து வருவதால், தவெகவைச் சேர்ந்த தற்போதைய புதிய அமைச்சர்கள் தங்குவதற்கு இடமில்லாமல் திணறி வருகிறார்கள். இதன் காரணமாக, அவர்கள் தற்காலிகமாக அரசின் விருந்தினர் மாளிகையில் (Guest House) உள்ள அறைகளில் தங்கி அரசுப் பணிகளை கவனித்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்கவிருக்கிறது. அதற்குள் புதிய அமைச்சர்கள் அனைவருக்கும் உரிய அரசு பங்களாக்கள் முறைப்படி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பதில் முதல்வர் விஜய் உறுதியாக இருக்கிறார். இதனை அதிகாரிகளிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள அவர், பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக இந்தச் சிக்கலை முடிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். முதலமைச்சரின் இந்த கறார் பேச்சை அடுத்து, அவரது செயலாளரிடமிருந்து பொதுப்பணித்துறை (PWD) அதிகாரிகளுக்கு அதிரடியான உத்தரவுகள் பறந்துள்ளன. "உடனடியாக மாஜி அமைச்சர்களிடம் பேசி பங்களாக்களை காலி செய்ய நடவடிக்கை எடுங்கள்" என அழுத்தமான உத்தரவு வர, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்போது மாஜி அமைச்சர்களைத் தொடர்பு கொண்டு பங்களாக்களை காலி செய்யுமாறு கடுமையான அழுத்தத்தைக் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே, தற்போதைய அமைச்சரவையில் முக்கியப் புள்ளியாக வலம் வரும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுகவின் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வசிக்கும் இடங்களை குறிவைத்து களம் இறங்கியிருப்பது தலைமைச் செயலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, கடந்த ஆட்சியில் தலைமைச் செயலகத்தில் (கோட்டையில்) உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அதே அறையில் தான் தற்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அமர்ந்து கோப்புகளைக் கவனித்து வருகிறார். கோட்டையில் உதயநிதியின் அறையைக் கைப்பற்றிய ஆதவ் அர்ஜுனா, இப்போது உதயநிதி வசித்த அரசு பங்களாவையும் தனக்கே ஒதுக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுமட்டுமன்றி, உதயநிதி வசித்து வந்த அந்த விஐபி பங்களாவைத் தனக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற தனது விருப்பத்தை முதலமைச்சர் விஜய்யிடமும் ஆதவ் அர்ஜுனா நேரடியாகக் கொண்டு சென்றுள்ளதாகத் தெரிகிறது. மறுபுறம், திமுக தற்போது பிரதான எதிர்க்கட்சியாக இருப்பதால், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு முறைப்படி அரசு பங்களா ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அந்த அடிப்படையில், தான் இதுவரை வசித்து வந்த அதே 'குறிஞ்சி' இல்லத்தையே மீண்டும் தனக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனத் தன்னை அணுகிய அதிகாரிகளிடம் உதயநிதி ஸ்டாலின் பிடிவாதமாக வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆட்சியில் உதயநிதிக்காக குறிஞ்சி இல்லம் மட்டுமன்றி, அதன் அருகில் இருந்த மற்றொரு பங்களாவும் சேர்த்து இரண்டு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவர் இரண்டு பங்களாக்களையும் சேர்த்து பயன்படுத்தி வந்தார். இப்போது எழுந்துள்ள சிக்கலைத் தீர்க்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் அரசுக்கு இரண்டு முக்கிய ஆப்சன்களை (Options) பரிந்துரை செய்துள்ளனர்: ஆப்சன் 1: உதயநிதி பயன்படுத்தி வந்த இரண்டு பங்களாக்களையும் முழுமையாகப் பறித்துவிட்டு, அவருக்குப் பதிலாக வேறு ஒரு புதிய பங்களாவை எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தில் ஒதுக்கீடு செய்வது. ஆப்சன் 2: அவர் பயன்படுத்தி வந்த இரண்டு பங்களாக்களில் ஒன்றை மட்டும் அரசு திரும்பப் பெற்றுக்கொண்டு, அவர் கேட்டுக்கொள்ளும் 'குறிஞ்சி' இல்லத்தை மட்டும் அவருக்கே மீண்டும் ஒதுக்குவது. பட்ஜெட் கூட்டத்தொடர் நெருங்கி வரும் வேளையில், மாஜிக்களின் பிடிவாதம் ஒருபுறம், புதிய அமைச்சர்களின் எதிர்பார்ப்பு மறுபுறம் என அரசு பங்களா விவகாரம் கோட்டையில் பெரும் மல்லுக்கட்டாக மாறியுள்ளது. முதல்வர் விஜய் இதில் என்ன இறுதி முடிவு எடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். - சிறப்பு நிருபர் எழில்விருந்தினர் மாளிகையில் தவெக அமைச்சர்கள்:
அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் கொடுத்த பிரஷர்:
உதயநிதியின் இடத்தை குறிவைக்கும் ஆதவ் அர்ஜுனா
குறிஞ்சி இல்லத்தை விட மறுக்கும் உதயநிதி - அதிகாரிகள் தந்த 2 ஆப்சன்கள்: