234 எம்எல்ஏக்களிடமும் சத்தியம் வாங்கினார் முதல்வர் விஜய் - சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேச்சு

  • திண்டுக்கல்: "மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என எங்களை மேடையில் நிற்க வைத்து முதலமைச்சர் சத்தியம் வாங்கினார். இந்தியாவில் எந்த முதலமைச்சரும் இப்படி செய்தது இல்லை." என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கூறியுள்ளார்.

    Advertisement

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், "முதியோர் இல்லத்தில் உள்ளவர்களிடம், 'நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள்?' என்று கேட்டால், அந்த முதியோர்கள் சொல்லும் அந்த வரலாறு மனதை வேதனைப்படுத்துகிறது. பெற்று, வளர்த்து, ஆளாக்கி, அழகு பார்க்கும் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் நிலை குறைய வேண்டும்.

    Advertisement

    தற்போதைய சூழலில், பெண்களின் பெற்றோரை அரவணைக்கும் வகையில் இளைஞர்கள் அனுசரித்துச் செல்ல வேண்டும். குடும்பப் பிரச்னைகளால் பெற்றோர்களை பிரித்து வைக்கும் நிலை வேண்டாம். வாழும்போது பெற்றோர்களை மதிக்கத் தெரியாமல், வணங்கத் தெரியாமல், அவர்கள் இறந்த பிறகு அழுவதில் ஒரு பயனும் இல்லை. பெற்றோர்களை மதிக்கும் பண்பை இளைஞர்களும், மாணவர்களும் கடைப்பிடிக்க வேண்டும்.

    30, 40 ஆண்டுகளுக்கு முன்பு, திருமணமான உடன் பெண்கள்
    கட்டுப்பாட்டுக்குள் அடைக்கப்பட்டார்கள். கணவர் என்ன செய்தாலும்
    பொறுத்துக்கொண்டு போக வேண்டும் என்று கட்டுப்படுத்தப்பட்டார்கள்.
    ஆனால், இப்போதைய காலம் அப்படி அல்ல. இன்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. தாங்கள் கூறுவதையும் கணவர்கள் கேட்டுக்கொள்கின்ற புரிதல் ஏற்பட்டுவிட்டது. அந்தக் காலத்தில் நடந்தது போல் அதிகாரம் யாரும் செலுத்த முடியாது.

    Advertisement

    எனக்குத் திருமணம் ஆனபோதும் அப்படித்தான் இருந்தது. ஆனால், இப்போது அப்படி இல்லை. கணவர் காலில் விழ வேண்டும் என்றால், 'நான் ஏன் காலில் விழ வேண்டும்?' என்கிறார்கள். ஆணுக்குப் பெண் சமமாக இருக்க வேண்டும். அதை கணவர்மார்கள் புரிந்துகொள்ள வேண்டும். கணவன்-மனைவிக்குள் நட்புறவு இருக்க வேண்டும்.

    ஜாதி மற்றும் பணம் படைத்தவர்கள் மட்டும்தான் ஆட்சியில் அமர முடியும் என்ற நிலையை இந்த தவெக ஆட்சி மாற்றியுள்ளது. வாக்களித்த மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்று கூறி, 234 சட்டமன்ற உறுப்பினர்களையும் மேடையில் நிற்க வைத்து முதல்வர் விஜய் சத்தியம் வாங்கினார்.

    Advertisement

    அதையெல்லாம் நீங்கள் பார்த்தீர்களா என்று தெரியவில்லை. இது இந்தியாவிலேயே எந்தக் கட்சியினரும் செய்யவில்லை. நேர்மையாக இருப்போம் என்று சத்தியம் செய்து கொடுத்திருக்கிறோம். அந்தப் பணியைத்தான் தற்போது ஆளுங்கட்சியினர் செய்து வருகின்றனர்" எனப் பேசியுள்ளார்.

    English Summary

    “Chief Minister Vijay made us stand on the stage and take an oath to be truthful and honest to the people. No other Chief Minister in India has done this,” said Speaker JCD Prabhakar.