சென்னை எழும்பூர் மருத்துவமனைக்கு திடீர் விசிட் அடித்த முதல்வர் விஜய்.. மருத்துவர்களுடன் ஆலோசனை

  • சென்னை: தமிழக முதல்வர் விஜய் இன்று திடீரென சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். எந்த வித அறிவிப்பும் இன்றி திடீரென சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வந்த முதல்வர் விஜய் அங்கிருந்த மருத்துவ பயனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தார். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் எதுவுமே சரியில்லை என பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில் முதல்வர் விஜய் இந்த திடீர் ஆய்வை மேற்கொண்டுள்ளார்.

    Advertisement

    சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மூன்று முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்ட முதல்வர் விஜய், திடீரென சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவனைக்கு புறப்பட்டார். முதல்வர் விஜய்யுடன் அமைச்சர் அருண்ராஜ் இருந்தார். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வந்த விஜய் மருத்துவமனையில் உள்ள பயனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    Advertisement

    மருத்துவமனை வசதிகள் எப்படி இருக்கு?

    மகப்பேறு பிரிவுக்கு சென்ற முதல்வர் விஜய் அங்கிருந்த பெண்கள், தாய்மார்களிடம் மருத்துவமனையில் வசதிகள் எப்படி இருக்கு, சிகிச்சைகள் எப்படி இருக்கு என்பது உள்ளிட்டவை குறித்து அவரிடம் கேட்டறிந்தார். மருத்துவமனையில் உள்ள நர்சுகள், மருத்துவர்களிடமும் விஜய் பேசினார். குறிப்பாக மகப்பேறு மருத்துவர்களுடன் 20 நிமிடங்களுக்கு மேலாக முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

    35 நிமிடங்கள் ஆய்வு செய்த விஜய்

    அப்போது குழந்தைகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாதவாறு சிகிச்சைகள் வழங்க வேண்டும் என்றும், கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவமனையில் போதுமான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், சிகிச்சைகளை மேம்படுத்துவது குறித்தும் மருத்துவர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். சுமார் 35 நிமிடங்கள் மருத்துவமனையில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

    Advertisement

    சமூக வலைத்தளத்தில் புகார் தெரிவித்து வீடியோ

    சமூக வலைத்தளத்தில் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் எதுவுமே சரியில்லை.. அய்யா முதல்வர் அய்யா நீங்க தான் நடவடிக்கை எடுக்கனும் என ஒரு வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. இந்த வீடியோவை பார்த்த பிறகு தான் முதல்வர் விஜய் இன்று சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருந்த வீடியோவில் பெண் கூறியிருப்பதாவது:-

    "சார்.. வணக்கம் சார், சென்னை எழும்பூர் பிரசவப் மருத்துவமனை.. இங்க நிர்வாகமே சரியில்லை அய்யா.. இங்க ரொம்ப வொர்ஸ்டா இருக்கு.. வறுமைக்கோட்டுக்கு கீழ உள்ளவங்க தான் அதிகமாக வருகிறார்கள்.. எங்கக் கிட்ட எல்லாத்துக்கும் காசு கேட்கிறாங்க.. எங்களுக்கு கொடுக்க வேண்டிய பொருட்கள் கூட வந்து சேரவில்லை.. சுத்தமே இல்லை.. சுகாதாரமே குறைந்து போச்சு.. இந்த வீடியோவை பார்த்துட்டு நீங்க தான் அய்யா நடவடிக்கை எடுக்க வேண்டும்.." என்று அந்த பெண் கூறியிருந்தார்.

    Advertisement

    கழிப்பறை வசதி வேண்டும்

    இதையடுத்து தான் இன்று முதல்வர் விஜய் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஒப்பந்ததாரர்கள் தான் இது போன்ற தவறில் ஈடுபட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் விஜய் மருத்துவ பயனாளிகள், பொதுமக்களை நேரில் பார்த்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது, "கூடுதல் கழிவறை வேண்டும் என்பது உள்ளிட்ட பலேறு கோரிக்கைகளை மக்கள் விஜய்க்கு கோரிக்கையாக வைத்துள்ளனர். விரைவில் இது நிறைவேற்றப்படுமென முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

    English Summary

    CM Vijay: Tamil Nadu Chief Minister Vijay made an unannounced visit to the Government Children's Hospital in Chennai's Egmore. He inspected hospital facilities and held discussions with obstetricians for over 20 minutes, reviewing maternal and child healthcare services and hospital operations.