விஜய் உடன் Cognizant அதிகாரிகள் திடீர் சந்திப்பு.. தலைமைச் செயலகத்தில் நடந்தது என்ன?

  • தமிழ்நாட்டின் ஐடி மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையை வலுப்படுத்தும் நோக்கத்துடன், முதலமைச்சர் விஜய் இன்று ஐடி துறையின் முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசினார். நேற்று வங்கித் துறை அதிகாரிகளை சந்தித்த முதலமைச்சர் விஜய், இன்று உலகளாவிய ஐடி நிறுவனங்களின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியது, ஐடி துறையினர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    Advertisement

    தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற இந்த சந்திப்பில், உலகின் முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் (Cognizant) மற்றும் தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் (NASSCOM) ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Advertisement

    இந்தச் சந்திப்பு, தமிழ்நாட்டின் ஐடி துறையின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால வளர்ச்சி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    காக்னிசன்ட் நிறுவனத்துடன் பேச்சு

    காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் வாரியர் தலைமையிலான குழு முதலமைச்சரை சந்தித்தது. மேலும் இந்நிறுவனத்தின் இந்தியாவுக்கான கார்ப்பரேட் விவகாரங்கள் தலைவர் கௌரவ் ஹஸ்ரா, தமிழ்நாடு தலைவர் அர்ச்சனா ராம்குமார் உள்ளிட்டோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

    கடந்த சில ஆண்டுகளாக காக்னிசன்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் தனது இருப்பை படிப்படியாக குறைத்து வந்த நிலையில், இந்தச் சந்திப்பு அந்த நிறுவனத்தின் மீண்டும் தமிழ்நாட்டில் முதலீட்டை அதிகரிக்க வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    குறிப்பாக, குளோபல் கேபபிலிட்டி சென்டர்கள் (GCC) மூலம் தமிழ்நாட்டில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நாஸ்காம் பிரதிநிதிகளுடன் ஆலோசனை

    இதேபோல், நாஸ்காம் நிறுவனத்தின் தலைவர் ராஜேஷ் நம்பியார் தலைமையிலான குழுவும் முதலமைச்சரை சந்தித்துப் பேசியது. துணைத் தலைவர் ஸ்ரீகாந்த் சீனிவாசன், இயக்குநர் உதய சங்கர், தென் மண்டல இயக்குநர் பாஸ்கர் குமார் வர்மா ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

    இந்தியாவின் ஐடி துறையின் வளர்ச்சியில் நாஸ்காம் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், தமிழ்நாட்டின் ஐடி கொள்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.

    Advertisement

    புதிய ஐடி அமைச்சகம் - புதிய அணுகுமுறை

    தமிழ்நாட்டில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (AI) துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஆர். குமார் ஏஐ , தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைகளின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

    கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் ஐடி துறை வளர்ச்சி வேகம் சற்று குறைந்திருந்த நிலையில், புதிய அரசு இந்தத் துறையை மீண்டும் வலுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலமைச்சர் விஜய் வங்கித் துறை மற்றும் ஐடி துறை தலைவர்களை மட்டும் அல்லாமல் ஆட்டோமொபைல் முதல் பல துறை அதிகாரிகளை சந்தித்து வருகிறார்.

    Advertisement

    இந்தச் சந்திப்புகள், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும், இருக்கும் நிறுவனங்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Chief Minister Vijay held discussions with top leaders of Cognizant and NASSCOM today to strengthen Tamil Nadu’s IT and Artificial Intelligence sector. தமிழ்நாட்டின் ஐடி மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையை வலுப்படுத்தும் நோக்கத்துடன், முதலமைச்சர் விஜய் இன்று காக்னிசன்ட் மற்றும் நாஸ்காம் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.