விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ்

  • டெல்லி: தமிழகத்தில் சமீபத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற முதலமைச்சர் விஜய், முதல் அரசுமுறைப் பயணமாக தலைநகர் டெல்லிக்கு சென்றார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    முதலமைச்சர் விஜய் டெல்லியில் நாடாளுமன்ற வளாகம் மற்றும் பிரதமர் இல்லத்தில் இந்த முக்கிய சந்திப்புகளை நடத்தினார். அதோடு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அப்போது தமிழகத்தின் பொருளாதாரத் தேவைகள், மத்திய அரசிடமிருந்து நிலுவையில் உள்ள நிதி பங்கீடுகள் மற்றும் மாநில வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் விரிவாகப் பேசப்பட்டன.

    Advertisement

    பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் விஜய் சந்தித்தார். இந்த சந்திப்பு சுருக்கமாக இருந்தாலும் மிக முக்கியமானதாக இருந்தது. பிரதமர் மோடி, தேர்தலில் பெரும் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் புதிய முதலமைச்சருக்கு சில முக்கிய ஆலோசனைகளையும் வழங்கினார்.

    பிரதமர் மோடியின் முதல் ஆலோசனை அமைச்சர்களுக்கு பயிற்சி அளிப்பது பற்றியது. "உங்கள் அமைச்சரவையில் உள்ள அனைவரும் அரசு நிர்வாகத்துக்கு புதியவர்கள். எனவே உடனடியாக அமைச்சர்கள் அனைவருக்கும் ஒருங்கிணைந்த பயிற்சி முகாம் நடத்துங்கள். அரசு இயந்திரம் எப்படி இயங்குகிறது, கோப்புகள் எப்படி கையாளப்படுகின்றன, திட்டங்களை எப்படி செயல்படுத்துவது என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். இது உங்கள் அரசுக்கு பெரும் பலம் தரும்" என்று மோடி கூறினார்.

    Advertisement

    இரண்டாவது முக்கிய ஆலோசனை ஊடகங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பானது. பிரதமர் மோடி, "உங்களது அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் அனைவரும் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது அல்லது புதிய நபர்களிடம் பேசும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இன்றைய காலத்தில் ரகசிய கேமராக்கள் மூலம் உரையாடல்களை பதிவு செய்து சர்ச்சையை ஏற்படுத்த முயற்சிகள் நடக்கலாம். எனவே எல்லோரும் 100 சதவீத விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்" என்று எச்சரித்தார்.

    இந்த ஆலோசனைகள் புதிய அரசுக்கு பாதுகாப்பு கவசமாக பார்க்கப்படுகிறது. அரசியல் விமர்சகர்கள், "இந்த சந்திப்பு வெறும் மரியாதை சந்திப்பு அல்ல. நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மோடி வழங்கிய வழிகாட்டுதல் முக்கியமானது" என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    விஜய் எடுக்கும் முடிவு

    முதலமைச்சர் விஜய் இந்த ஆலோசனைகளை ஏற்று விரைவில் அமைச்சர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவுள்ளார் என்று தெரிகிறது. டெல்லி பயணத்தின் விளைவுகள் தமிழக அரசியலில் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த சந்திப்புகள் தமிழகத்துக்கு மத்திய அரசின் ஆதரவை பெற உதவும் என்றும், மாநில வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    English Summary

    CM Vijay Meets PM Modi & Nirmala Sitharaman in Delhi: Key Advice on Minister Training, Hidden Camera Alert