சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் இன்று முதல் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ள நிலையில், இதுகுறித்து பெற்றோர்களுக்கு முதலமைச்சர் விஜய் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். "அன்பார்ந்த பெற்றோருக்கு, வணக்கம்" என தொடங்கும் அந்த குறுஞ்செய்தி குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
அரசு பள்ளி மாணவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை தடுப்பது, பள்ளி வருகையை அதிகரிப்பது மற்றும் மாணவர்கள் கல்வியை தொடர்ந்து கற்கும் சூழலை உருவாக்குவது உள்ளிட்ட நோக்கங்களுடன், அரசு பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக கடந்த 2022ஆம் ஆண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
பின்னர் இந்தத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 37,447 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் சுமார் 19 லட்சத்து 34 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டில் மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. 2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த பிறகு, இந்த திட்டத்தின் பெயர் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என மாற்றப்பட்டது. மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. இந்த விரிவாக்கத்தின் மூலம் கூடுதலாக 15 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர். விரிவாக்கப்பட்ட திட்டத்தின் தொடக்க விழா இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் விஜய் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இன்றைய விரிவாக்கத்துக்கு பிறகு, 44,984 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ளனர். இதன் மூலம் மொத்தம் 34 லட்சத்து 64 ஆயிரம் மாணவர்கள் காலை உணவு திட்டம் மூலம் பயனை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக கூடுதலாக ரூ.217.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் நிலையில், மாணவர்களின் பெற்றோர்களுக்கு மெசேஜ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், "அன்பார்ந்த பெற்றோருக்கு, வணக்கம்! பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகைபுரிந்து, சிறப்பாகக் கல்வி கற்பதற்கு ஏதுவாகச் சத்தான, சுவையான காலை உணவு 22.9.2026 (செவ்வாய்க்கிழமை) முதல் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். மேலும், இறுதியில் "பிரியமுடன், ச. ஜோசப் விஜய், தமிழ்நாடு முதலமைச்சர்" என குறிப்பிடப்பட்டுள்ளது. காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் நிலையில், பெற்றோர்களுக்கு முதல்வர் அனுப்பிய இந்த மெசேஜ் குறித்த விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளை தவிர்த்து, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இன்று முதல் விரிவாக்கப்பட்ட காலை உணவுத் திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.காலை உணவு திட்டம்
இன்று விரிவாக்கம்
கூடுதல் மாணவர்கள்
விஜய் அனுப்பிய மெசேஜ்