சென்னை: "அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளை எல்லாம் முதலமைச்சர் விஜய் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். யாரேனும் தவறு செய்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து விடுவார்" என அமைச்சர் ஆனந்த் பேசியுள்ளார்.
மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து அமைச்சர் என்.ஆனந்த் தொகுதியில் தங்கி இருந்து பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் மதுராந்தகம் தாலுகா முதுகரை ஊராட்சியில் இன்று காலை கன்மாய் அருகே வேலை செய்து கொண்டு இருந்த பெண்களிடம் அமைச்சர் என்.ஆனந்த் தவெக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.
அப்போது பேசிய அமைச்சர் என்.ஆனந்த், "கிராமப்புற 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி இருக்கிறோம். மதுராந்தகம் தொகுதிக்கு பல திட்டங்களை கொண்டு வர இருக்கிறோம். என்றைக்குமே மக்கள் பணத்தில் ஒரு ரூபாய் கூட நாங்கள் தொடமாட்டோம். ஊழல் செய்ய மாட்டோம். ஊழல் செய்யவும் விடமாட்டோம். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் வங்கி கணக்கை முதலமைச்சர் விஜய் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். யாரெனும் தவறு செய்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து விடுவார். 50, 60 வருடம் ஆண்ட கட்சிகள் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. பலருக்கு பட்டா பிரச்சனை உள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். த.வெ.க. ஆட்சிக்கு வந்த 4 மாதத்தில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளோம். மக்கள் பணிகள் தொடர விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்" எனப் பேசினார்.