முதல்வர் விஜய்க்கு இப்போது எதார்த்தம் புரிந்து இருக்கும்.. ஆரம்பமே இப்படியா ?

  • சென்னை: ஒரு கட்சியின் தலைவராகவோ அல்லது சினிமா நட்சத்திரமாகவோ மேடைகளில் ஈஸியாக பேசிடலாம்; ஆனால், மாநிலத்தில் 8 கோடி மக்களுக்கான அரசாங்கத்தை நடத்துவது என்பது முற்றிலும் வேறான ஒரு போர்க்களம். திமுக, அதிமுக போன்ற பல ஆண்டு அரசியல் அனுபவமிக்க கட்சிகளையே திணறடிக்கும் தமிழக நிர்வாகப் பொறுப்பை, முதன்முறையாக கையில் எடுத்திருக்கும் முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது த.வெ.க. கூட்டணி அரசு, பதவியேற்ற சில வாரங்களிலேயே மிகக் கடுமையான சவால்களையும் நிர்வாகச் சிக்கல்களையும் எதிர்கொள்ளத் தொடங்கி இருக்கிறது.

    Advertisement

    மின்வெட்டு

    கோடைகால மின் தேவை புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நள்ளிரவில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியலிலும், மின்வாரிய அலுவலக முற்றுகையிலும் ஈடுபட்டுள்ளனர். சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்கவே அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. மின்சாரத் தட்டுப்பாடு வராது என்று அதிகாரிகள் சொன்னாலும், கள நிலவரம் த.வெ.க. அரசுக்கு நிர்வாக ரீதியாகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் தான் தொடர் மின்வெட்டு அடிக்கடி ஏற்படுவதும், மக்கள் இரவில் சாலை மறியலில் ஈடுபடுவதும் வாடிக்கையாகி வருகிறது.

    Advertisement

    சட்டம் ஒழுங்கு

    அடுத்ததாக கோயம்புத்தூரில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மொத்த மாநிலத்தையும் உலுக்கி உள்ளது. அதேபோல் கடந்த சில நாட்களில் நடந்துள்ள தொடர் கொலைச் சம்பவங்கள் புதிய அரசின் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கி உள்ளது. காவல் துறையைத் தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் விஜய்க்கு, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை எதிர்கொள்வதுடன், குற்றங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

    த.வெ.க. தொண்டர்களின் அத்துமீறல்கள்

    ஆட்சிப் பொறுப்புக்கு வந்த வேகத்தில், சில த.வெ.க. நிர்வாகிகள்/தொண்டர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வது மற்றும் அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்துவது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவதாக வெளியாகும் செய்திகள் கட்சித் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 'தூய்மையான அரசியல்' என்று கூறி வந்த விஜய்க்கு, தன் சொந்தக் கட்சியினரின் இத்தகைய செயல்பாடுகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய சவால் எழுந்துள்ளது.

    Advertisement

    அரசு மருத்துவமனை

    திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் செவிலியர் மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் விவாகரம், அதற்கு செவிலியர்கள் நடத்திய போராட்டம் பெரிய சர்ச்சையாகி உள்ளது. இதுபற்றி முதல்வர் விஜய்யும், துறை அமைச்சரும் விளக்கம் அளிக்க வேண்டியது வரும் அதபோல் மறுபுறம், நெல்லை மாவட்ட அணைகளில் விவசாயத்திற்குப் போதிய தண்ணீர் இல்லாததால் கருகும் பயிர்களைக் கண்டு விவசாயிகள் தவித்து வருகின்றனர். அதேபோல் இன்னும் ஒரு மாதத்தில் மேட்டூர் அணையை திறக்க வேண்டிய நிலை வரும். டெல்டா விவசாயிகளும் தண்ணீருக்காக குரல் எழுப்ப தொடங்குவாரக்ள்.

    கூட்டணி அரசின் கூடுதல் நெருக்கடிகள்

    த.வெ.க. தனிப் பெரும்பான்மை பெறாததால் (108 இடங்கள்), காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு கூட்டணி ஆட்சியை விஜய் அமைத்துள்ளார். கடந்த மே 21 அன்றுதான் 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.

    Advertisement

    அமைச்சர்களுக்கு சவால்கள்

    ஆட்சிப் பொறுப்புக்கு வந்து அமைச்சர்கள் தங்களின் துறைகளைப் புரிந்து கொள்வதற்குள்ளேயே, மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடத் தொடங்கி உள்ளார்கள். இப்போது தான் துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு துறையிலும் பல்வேறு பிரச்சனகளை எழுப்பி மக்கள் போராட தொடங்கி உள்ளனர். திமுக, அதிமுக போன்ற பல ஆண்டு கால அரசியல் அனுபவமிக்க கட்சிகளையே திணறடிக்கும் தமிழக நிர்வாகப் பொறுப்பை, முதன்முறையாக கையில் எடுத்திருக்கும் முதலமைச்சர் விஜய் எப்படி சமாளிக்க போகிறார் என்பதே இப்போது பெரிய கேள்வி..

    விஜய்யின் எதிர்காலம்

    சினிமாவில் 100 பேரை அடிப்பதாக காட்டலாம். அதனை ரசிப்பார்கள். ஆனால் நிஜத்தில் மக்கள் பிரச்சனையை அறிந்து அவர்களுக்கு தீர்வு தருவது என்பது மிகவும் கடினம். அதேபோல் இந்த விவாகரத்தில் அரசியல் கட்சிகள் செய்யும் அரசியலை முறியடிப்பதும் மிகவும் சவாலானது. முதல்வர் விஜய்க்கு இப்போது எதார்த்தம் புரிந்து இருக்கும்.. இனி தான் களம் சூடுபிடிக்க போகிறது. இந்தத் தொடக்கக்கால நெருக்கடிகளை விஜய் எப்படித் திறம்படக் கையாளப் போகிறார் என்பதைப் பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் அமையும்.

    English Summary

    Chief Minister Vijay and his TVK-led coalition government—having assumed the administrative responsibility of Tamil Nadu for the very first time—have begun facing severe challenges and administrative hurdles within just a few weeks of taking office; a responsibility that has historically overwhelmed even parties with decades of political experience, such as the DMK and the AIADMK.