நேற்று ரெய்டு.. இன்று உத்தரவு! அசத்தும் விஜய்.. மாணவர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற ஆணை

  • சென்னை: சைதாப்பேட்டை எம்.சி.ராஜா சமூகநீதி விடுதியில் முதல்வர் விஜய் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டிருந்தார். ஆய்வின் போது மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். இப்படி இருக்கையில், கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற சமூக நீதி நலத்துறை தற்போது உத்தரவிட்டிருக்கிறது.

    Advertisement

    திடீர் ஆய்வை தொடர்ந்து, மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சகம் உத்தரவிட்டிருப்பது மாணவர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.

    Advertisement

    அரசு உத்தரவு

    அரசு வெளியிட்டிருக்கும் உத்தரவில், விடுதி மாணவர்களின் உணவு தரத்தை ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் 2 பேர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். மாணவர்களின் உணவு பட்டியல் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. எல்பிஜி கேஸ் தட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சப்பாத்தி, இட்லி உணவு விநியோகம், மீண்டும் தொடங்கப்படும். மூடப்பட்டிருந்த கைப்பந்து விளையாட்டு மைதானம் மீண்டும் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். இனி மாணவர்கள் இரவு 12 மணி வரை விடுதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு வெளியிட்டிருக்கும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    திடீர் ஆய்வு

    தனது ஆட்சியில் கமிஷன், கரப்ஷனுக்கு இடமில்லை என்று முதல்வர் விஜய் தொடர்ந்து கூறி வருகிறார். இருப்பினும் அதிகாரிகள் மட்டத்தில் இன்னும் லஞ்சம் பெறுவது தொடர்ந்து வருகிறது. இப்படி இருக்கையில், விஜய் நேரடியாக களத்தில் இறங்கி அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில்தான் சென்னை எழுப்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    Advertisement

    விடுதியில் ஆய்வு

    அதை தொடர்ந்து நேற்று கொட்டும் மழையில், திடீரென சைதாப்பேட்டை எம்சி ராஜா விடுதியில் ரெய்டு நடத்தியிருந்தார். அப்போது மாணவர்கள் பல்வேறு குறைகளை அடுக்கியிருந்தனர். குறிப்பாக உணவின் தரம் மிக மோசமானதாக இருப்பதாக குற்றம்சாட்டியிருந்தனர். மாணவர்கள்தான் நாட்டின் எதிர்காலம் என்கிறீர்கள்.. ஆனால், இப்போது வரை மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மோசமானதாக இருக்கிறது என்று கூறியிருந்தனர். பல நேரங்களில் உணவில் வண்டு, புழு கிடப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

    மாணவர்கள் சொன்ன குறைகள்

    அதேபோல வார்டன் மற்றும் விடுதியின் காவலர்கள் மாணவர்களை தரக்குறைவாக நடத்துவதாகவும், கோச்சிங் கிளாஸ் போய்விட்டு தாமதமாக வந்தால், விடுதிக்குள் அனுமதிக்க மறுப்பதாகவும் கூறியிருக்கின்றனர். காவலர்களின் இந்த கட்டுப்பாடு காரணமாக பல நாட்கள் மாணவர்கள் வெளியில் பூங்காக்களில் தூங்குவதாகவும், இதனால் சமூக விரோதிகளின் தொந்தரவுக்கு ஆளாவதாகவும் தெரிவித்திருந்தனர்.

    Advertisement

    இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவர்கள், தமிழக காவல்துறையில் உள்ள மோப்ப நாய்களுக்கு வழங்கப்படும் உணவு படி தொகையை விட, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு படியின் தொகை மிக குறைவு. இதை அதிகரித்து வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    வெறும் ரூ.1500

    மாணவர்கள் சொல்வது உண்மைதான். தமிழக காவல்துறையில் உள்ள மோப்ப நாய்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.300 என்கிற விகிதத்தில் மாதம் ரூ.9000 ஒதுக்கப்படுகிறது. ஆனால், விடுதியில் தங்கி பயிலும் அரசு கல்லூரி மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.50 என மாதம் வெறும் ரூ.1500 மட்டுமே உணவு படியாக வழங்கப்படுகிறது. இதை உயர்த்த வேண்டும் என்று மாணவர் அமைப்புகள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

    Advertisement

    இப்படி இருக்கையில், மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அப்படியெனில் மாணவர்களின் உணவு படி தொகை உயர்த்தப்படுமா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

    English Summary

    CM Vijay conducted a surprise inspection yesterday at the M.C. Raja Social Justice Hostel in Saidapet. During the inspection, students put forward various requests. In response, the Social Justice and Welfare Department has issued orders to fulfill these requests immediately.