கைதிகளுக்கு என்ன மாதிரியான உணவு தரீங்க! சென்னை புழல் சிறையில் முதல்வர் விஜய் ஆய்வு!

  • சென்னை: சென்னை புழல் சிறை, காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் திடீர் என ஆய்வு மேற்கொண்டார். கைதிகளுக்கு அளிக்கப்படும் உணவு, மருத்துவ வசதிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

    Advertisement

    தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்ட நிலையில் கடந்த மே மாதம் முதல் தொடர்ந்து பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு திடீர் விசிட் அடிக்கிறார். அப்போது ஆய்வு நடத்தி அங்கிருக்கும் குறைகளை களைகிறார்.

    Advertisement

    அந்த வகையில் முதலில் எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அங்கு பச்சிளம் குழந்தைகளை தூக்கி கொஞ்சினார். மேலும் தாய்மார்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அவர்களிடம் நலம் விசாரித்தார்.

    இதையடுத்து பெரம்பூர் பேருந்து நிலைய நிர்வாக அலுவலகத்திலும் விஜய் ஆய்வு மேற்கொண்டார். பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கான அரசு விடுதியை பார்வையிட்டார். அப்போது அவரிடம் மாணவர்கள் பலர் புகார்களை அளித்தனர்.

    இதையடுத்து திருவள்ளூர் சிப்காட் தொழில்துறை வளாகத்தில் ஆய்வு நடத்தினார். பின்னர் நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலைகளை பார்வையிட்டார்.

    இதைத் தொடர்ந்து கோயம்பேட்டில் கழிவுநீரை குடிநீராக்கும் திட்ட பணிகளையும் ஆலைகளையும் ஆய்வு செய்து , அந்த குடிநீர் திட்ட பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

    Advertisement

    இதையடுத்து சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களை ஆய்வு செய்தார். பின்னர் மெட்ரோ ரயில் நிலையத்திலும் பயணித்தார். அப்போது பொதுமக்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.

    இதைத் தொடர்ந்து தற்போது புழல் மத்திய சிறை வளாகத்தில் முதல்வர் விஜய் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை புழலில் அமைந்துள்ள மத்திய சிறைச் சாலையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் நிலை, அங்கிருந்த வசதிகளை கேட்டறிந்தார். மேலும் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, உணவு தயாரிக்கப்படும் கூடம், மருத்துவ வசதிகள் என அனைத்தையும் முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் கைதிகளை தண்டிப்பதை விட சிறையில் அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என முதல்வர் தெரிவித்தாராம். அது போல் அங்கிருந்த புழல் காவல் நிலையத்தையும் விஜய் ஆய்வு செய்தார்.

    Advertisement

    சென்னை புழல் சிறையில் மத்திய விசாரணை சிறை, தண்டனை சிறை, மகளிர் சிறை என 3 சிறைகள் உள்ளன. இந்த 3 சிறைகளிலும் 3500-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    CM Joseph Vijay review in Puzhal Central Prison and he reviewed about medical, food and basic amenities for the prisoners.