வாக்குறுதி என்ன ஆச்சு? ஆட்சிக்கு வந்த 5 வாரத்தில்.. 4 லாக் அப் மரணங்கள்.. அமைதி காக்கும் விஜய்?

  • சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், முந்தைய திமுக ஆட்சியில் நடந்த காவல் துறை அத்துமீறல்களையும், லாக் அப் மரணங்களையும் கடுமையாக விமர்சித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, தன் ஆட்சி அமைந்ததும் காவல் துறை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார்.

    Advertisement

    அந்த அரசியல் மாற்றத்தின் அலையில், தவெக வெற்றி பெற்று விஜய் முதல்வராக பொறுப்பேற்று மூன்று மாதங்கள் கூட ஆகாத நிலையில்... தமிழகத்தில் மீண்டும் லாக் அப் மரணங்கள் முன்பு இருந்ததை விட மிக அதிகமாக நடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 4 பேர் காவல் துறை மற்றும் சிறைக் காவலில் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், முதல்வர் விஜய்யும், அவரது தலைமையிலான அரசும் இந்த விவகாரத்தில் மெளனம் சாதித்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    தொடரும் உயிரிழப்புகள்: அதிர்ச்சி தரும் பின்னணி

    விஜய் அரசு பொறுப்பேற்ற ஒரே மாதத்தில், ஜூன் 8 அன்று சென்னையில் 28 வயதான ஓட்டுநர் வெங்கடேசன், காவல் துறையின் விசாரணையின் போது உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, ஜூலை 13 அன்று நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் (35) சிறையில் அடித்துக் கொல்லப்பட்டார்.

    Advertisement

    அவரது உடலில் 19 காயங்கள் இருந்ததும், சிசிடிவி காட்சிகளும் அவர் மீதான தாக்குதலை உறுதி செய்தன. ஊனமுற்ற கையில் ரத்த காயம், உடல் முழுக்க பல காயங்கள், எலும்பு முறிவுகள், ரத்த கட்டு காரணமாக முகம் கூட கருத்துப் போய் என் கணவர் கிடந்ததை பார்த்து உடைந்து போனேன்.. என அவரது மனைவி ஆனந்தவள்ளி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

    இதன் தொடர்ச்சியாக, ஜூலை 15 அன்று புழல் சிறையில் பி. பாலாஜி (45) என்பவரும், நேற்று ஜூலை 23 அன்று தூத்துக்குடியில் காவல் துறை விசாரணையில் பலத்த காயமடைந்த அருணாச்சலம் (24) என்பவரும் உயிரிழந்தனர்.

    Advertisement

    வாக்குறுதியும் மௌனமும்

    கடந்த ஆண்டு ஜூலை மாதம், லாக் அப் மரணங்களால் பாதிக்கப்பட்ட 18 குடும்பங்களை நேரில் சந்தித்த விஜய், நிதியுதவி வழங்கி நீதியை உறுதி செய்ய போவதாக உறுதியளித்தார். ஆனால், முதலமைச்சராகப் பொறுப்பேற்று உள்துறையையும் தன் வசம் வைத்துள்ள விஜய், தற்போது வரை இந்த தொடர் மரணங்கள் குறித்தோ அல்லது காவல் துறை சீர்திருத்தங்கள் குறித்தோ எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை.

    அரசின் இந்த மௌனத்திற்கு மத்தியில், தவெகவின் கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் அமைச்சர் வன்னி அரசு மட்டுமே குரல் கொடுத்துள்ளார். விஜய் காவல் துறை சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    Advertisement

    சீர்திருத்தங்களின் அவசியம்

    கன்னியாகுமரி சம்பவத்தில் 3 சிறை ஊழியர்கள் உட்பட 11 பேர் உடனடியாகக் கைது செய்யப்பட்டது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும், காவல் துறை சிஸ்டமில் ஆழமாக வேரூன்றியுள்ள வன்முறைப் போக்கை மாற்ற முறையான சீர்திருத்தங்கள் அவசியம் என மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை வைக்கின்றன.

    காவல் நிலையங்கள் மற்றும் சிறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல், கைதிகளைப் பாதுகாப்பதற்கான உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றுதல், சிறைகளில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை ஒழித்தல் போன்ற நீதிமன்ற உத்தரவுகள் இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

    மாநிலப் பட்டியலில் சட்டம்-ஒழுங்கு இருப்பதால், தமிழக அரசு நினைத்தால் மாநில அளவில் சித்திரவதை எதிர்ப்புச் சட்டத்தை இயற்ற முடியும். வெறும் தனிநபர் கைது நடவடிக்கைகளுடன் நிறுத்தாமல், இதுபோன்ற மனித உரிமை மீறல்களுக்கு நிரந்தர சட்டப்பூர்வ தீர்வு காணப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட குடும்பங்களின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.

    English Summary

    CM Vijay’s Government Faces heavy Backlash Over Rising Custodial Deaths in Tamil Nadu