பாஸ்போர்ட் அலுவலகத்தில் விஜய்.. அதிகாரி கேட்ட ‘வழக்கு’ கேள்வி.. கொதித்த சுந்தரவள்ளி IAS?

  • சென்னை: தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், பல்வேறு சர்வதேச நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் விரைவில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது தொடர்பாகத் தமிழக அரசின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு மத்திய அரசிடமிருந்து உரிய அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.

    Advertisement

    இருப்பினும், அவரது பயண அட்டவணை இன்னும் முழுமையாக இறுதி செய்யப்படவில்லை. பிரிட்டனுக்கு மட்டும் சென்று முதலீட்டாளர்களைச் சந்தித்துவிட்டுத் திரும்புவதா அல்லது ஐரோப்பாவின் பிற முக்கிய தொழில் நகரங்களுக்கும் சென்று அங்குள்ள சர்வதேச தொழில் அமைப்புகளைச் சந்திப்பதா என்ற ஆலோசனைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    Advertisement

    ஓரிரு நாட்களில் இதில் தெளிவான முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது. அதே சமயம், பயணத்தைத் தொடங்கும் நல்ல நாள், நேரம் மற்றும் சென்னை திரும்பும் நேரம் ஆகியவை குறித்து ஆஸ்தான ஜோதிடரிடம் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், அவர் குறித்துக் கொடுக்கும் சுப முகூர்த்தத் தேதிகளின் அடிப்படையிலேயே அதிகாரப்பூர்வ பயணப் பட்டியல் வெளியாகும் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    பாஸ்போர்ட் அலுவலகத்தில் 'ரோடு ஷோ' பாணி: எழும் பொதுவெளிக் கூச்சல்கள்

    அரசு முறைப் பயணங்களுக்கான 'டிப்ளமேட் பாஸ்போர்ட்' (Diplomatic Passport) பெறுவதற்கான நடைமுறைகளை முடிப்பதற்காக, இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை அண்ணா சாலையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்றார். அவருடன் தமிழக அரசின் பொதுத்துறைச் செயலாளர் சுந்தரவள்ளி ஐ.ஏ.எஸ் மற்றும் பொதுத்துறையைச் சேர்ந்த 4 உயர் அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.

    Advertisement

    ஆனால், முதலமைச்சரின் இந்த வருகை மிகச் சாதாரண நடைமுறைப் பணிக்கானது போலன்றி, ஒரு அரசியல் மாநாட்டுக்கான 'ரோடு ஷோ' பாணியில் அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது. நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பாஸ்போர்ட் அலுவலக வளாகத்தைச் சுற்றித் திரண்டதால், அண்ணா சாலைப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பாஸ்போர்ட் சேவைக்காக வந்திருந்த சாமானிய மக்களும் கடும் அவதிக்குள்ளாகினர். முதலமைச்சரின் இந்த அதிரடி விசிட் பொதுவெளியிலும், அரசியல் நோக்கர்கள் மத்தியிலும் கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

    அதிகாரியின் கிடுக்கிப்பிடி கேள்வி: காரசாரமான வாக்குவாதம்

    பாஸ்போர்ட் அலுவலகத்திற்குள் முதலமைச்சர் விஜய் சென்றதும், அங்கிருந்த மண்டல பாஸ்போர்ட் அதிகாரி நடைமுறையில் உள்ள சர்வதேச விதிகளின்படி விண்ணப்பப் பரிசீலனையைத் தொடங்கினார். டிப்ளமேட் பாஸ்போர்ட் வழங்குவதற்கு முன்னதாக மேற்கொள்ளப்படும் வழக்கமான கேள்விகளை அவர் முதலமைச்சரிடம் வரிசையாகக் கேட்டார். அதில் சில கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் நேரடியாகவும், சில நிர்வாக ரீதியான விளக்கங்களுக்குச் செயலாளர் சுந்தரவள்ளியும் பதிலளித்து வந்தனர்.

    Advertisement

    விசாரணையின் ஒரு கட்டத்தில், "முதலமைச்சர் மீது நிலுவையில் ஏதேனும் குற்ற வழக்குகள் அல்லது சட்ட ரீதியான வழக்குகள் உள்ளதா?" என்ற வழக்கமான சரிபார்ப்புக் கேள்வியை அதிகாரி எழுப்பியுள்ளார். இதனால் பொதுத்துறைச் செயலாளர் சுந்தரவள்ளி கடுமையான அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார். "மாநிலத்தின் முதலமைச்சரிடமே இப்படியான கேள்விகளைக் கேட்பதா? ஒரு டிப்ளமேட் பாஸ்போர்ட் வழங்குவதற்கு இதெல்லாம் தேவையா? தேவையில்லாமல் விவகாரத்தை இழுக்கிறீர்களா?" என்று அதிகாரியிடம் அவர் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

    அமைதி காத்த முதல்வர் விஜய்: தணிந்த பரபரப்பு

    சுந்தரவள்ளி ஐ.ஏ.எஸ் ஆவேசமடைந்ததைக் கண்ட முதலமைச்சர் விஜய், உடனே தலையிட்டு அவரை அமைதிப்படுத்தியுள்ளார். "அதிகாரி தனது கடமையைத்தான் செய்கிறார். நடைமுறை விதிகளின்படி கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதுதானே முறை" என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய விஜய், அதிகாரி கேட்ட கேள்விகளுக்கு எந்தவித தயக்கமும் இன்றி மிகவும் நிதானமாகவும் அமைதியாகவும் விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது. முதலமைச்சரின் இந்த நிதானமான அணுகுமுறையை அடுத்தே அங்கு நிலவிய பரபரப்பான சூழல் தணிந்தது.

    Advertisement

    விசாரணை நடைமுறைகள் முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பாஸ்போர்ட் அலுவலகப் பணிகள் முடிக்கப்பட்டு முதல்வர் புறப்பட்டுச் சென்றார். ஆனாலும், பாஸ்போர்ட் அலுவலகத்தில் நடந்த இந்த 'வழக்கு' தொடர்பான வாக்குவாதமும், வெளியே நடந்த அந்த 'ரோடு ஷோ' பரபரப்பும் கோட்டை வட்டாரத்திலும் அரசியல் அரங்கிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    CM Vijay’s Passport Office Visit: Bureaucrat Heated Argument Over ‘Pending Cases’ Query Sparks Buzz