விஜய் போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.. இனி இதுதான் ரூல்ஸ், கண்டிப்பா பாலோ செய்தே ஆகணும்..!

  • விஜய் முதல்வராக பதவியேற்றியது முதல் பல மாற்றங்கள் நடைபெற்று வருகிறது, குறிப்பாக அரசு நிர்வாகத்தில் முக்கிய அதிகாரிகள் இடம் மாற்றம் முதல் ஒவ்வொரு துறையிலும் எப்படி செயல்பட வேண்டும் என்பது வரையில் புதிய அரசு பல்வேறு நிர்வாக மாற்றங்களை கொண்டு வருகிறது.

    Advertisement

    இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் காலை 10 மணிக்குள் அலுவலகத்துக்கு வந்து, உடனடியாக தங்கள் இருக்கையில் பணியைத் தொடங்க வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தலைமைச் செயலகத்தில் 40க்கும் மேற்பட்ட துறைகளில் 5,500க்கும் அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான பணி நேரம் என்பது காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை மட்டுமே. ஆனால் பல ஊழியர்கள் காலதாமதமாக வந்து, பணியை தாமதமாகத் தொடங்குவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்தது. ஒரு ஊழியர் தாமதமானால், அவரது பணிகளும் பாதிக்கப்பட்டு, மொத்த அரசு நிர்வாகமும் தாமதமாகும் நிலை உருவானது.

    இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தலைமைச் செயலக அதிகாரிகளுக்கு முதல்வர் வாயிலாக ஒரு வாய்மொழி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளனர். அதன்படி, காலை 10 மணிக்கு முன்பாகவே அலுவலகத்துக்கு வந்து, வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு, சரியாக 10 மணிக்கு பணியைத் தொடங்க வேண்டும்.

    Advertisement

    முதலமைச்சர் விஜய் பெரும்பாலும் காலை 9:30 மணி முதல் 10 மணிக்குள் தலைமைச் செயலகத்துக்கு வந்து பணியைத் தொடங்குவதால், ஊழியர்களும் அதே ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என்பது அரசின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    சென்னை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து கார், பேருந்து, ரயில் உள்ளிட்ட வாகனங்களைப் பயன்படுத்தி வரும் ஊழியர்கள், முன்கூட்டியே பயணத்தைத் திட்டமிட்டு வர வேண்டும் என்பதே இந்த உத்தரவின் முக்கிய நோக்கமாகும். இதனால் அரசுப் பணிகளில் எந்தவித தொய்வும் ஏற்படாமல், சீரான முறையில் நடைபெறும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

    இதற்கு முன்பு, ஊழியர்களின் வருகை நேரத்தை கண்காணிக்க பயோமெட்ரிக் முறையை அறிமுகப்படுத்த மனிதவள மேலாண்மைத் துறை முயற்சி எடுத்தது. ஆனால் ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. தற்போது ஒவ்வொரு துறையிலும் உள்ள வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடும் பழைய முறையே தொடர்கிறது.

    Advertisement

    வரும் நாட்களில் தலைமைச் செயலாளர் மற்றும் துறைச் செயலாளர்கள் இந்த உத்தரவின்படி ஊழியர்களின் வருகை நேரத்தை கண்காணிப்பார்கள். சரியான நேரத்தில் வராத ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    தற்போதைக்கு இது வாய்மொழி உத்தரவாக இருந்தாலும், தொடர்ந்து நேரம் கடைபிடிக்கப்படாமல் இருந்தால் அதிகாரப்பூர்வ உத்தரவு மற்றும் கடுமையான நடவடிக்கைகள் வரக்கூடும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    English Summary

    Tamil Nadu Chief Minister Vijay has issued a strong directive to all Secretariat employees to reach the office before 10 AM and begin work on time. This move aims to improve punctuality, reduce delays in government functioning, and ensure smoother administration at the Tamil Nadu Secretariat in Chennai.