CM Vijay: எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது- முதல்வர் விஜய் விளக்கம்

  • சென்னை : எனது பதிலுரையின் இடையேயான உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது, யாரையும் புண்படுத்தும் செயலாக அர்த்தம் கொள்ள வேண்டாம் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் தனது விளக்கத்தில் தெரிவித்திருந்தார்.

    Advertisement

    மிசாவின் போது மு.க.ஸ்டாலினின் தாடை உடைக்கப்பட்டதைதான் முதல்வர் உருவகேலி செய்திருந்தார் என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டித்திருந்தார். அது போல் திமுகவினரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதற்கு விஜய் விளக்கமளித்திருக்கிறார்.

    சட்டசபையில் காவல் துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது சட்டம் ஒழுங்கு தொடர்பாக பல்வேறு கட்சியைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதில் அளித்தார்.

    அதில் பதிலுரையின் போது திமுக மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். சர்காரியா கமிஷனின் அறிக்கை, கட்சி நிதி தொடர்பான அமலாக்கத் துறை அறிக்கையை குறிப்பிட்டிருந்தார்.

    Advertisement

    அப்போது, "எதற்கெடுத்தாலும் மிசா, மிசாவை பார்த்தவர்கள் என பேசுகிறார்கள். மிசாவைப் பற்றிய வரலாறு எல்லோருக்கும் தெரியும்" என முதல்வர் விஜய் பேசிய போது தனது தாடையை தட்டினார். அந்த உடல்மொழிக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

    அது போல் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று காவல்துறை மானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதிலுரை வழங்கினார். ஆனால் சட்டம் ஒழுங்கு, காவல்துறை உள்ளிட்ட உறுப்பினர்கள் எழுப்பிய எந்த கேள்விக்கும் இந்த 'பதிலுரையில்' எந்த பதிலும் இடம் பெறவில்லை.

    Advertisement

    மக்கள் பிரச்சனை பற்றி பேசுவதற்கு பதிலாக முழுக்க முழுக்க எதிர்க்கட்சியை குறிவைத்து அடுக்கிய குற்றச்சாட்டுகளே நிரம்பி இருந்தன. ஒன்றிய அரசின் பிடியில் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் உள்ள நிலையில் அமலாக்க துறையின் குற்றச்சாட்டுகளை மட்டும் சொல்லி அதை ஊழல் என வகைப்படுத்துவது எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல.

    முதலமைச்சர் ஆக இருந்த திரு.அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதும் சிறையில் அடைக்கப்பட்டதும் பின்னர் நீதிமன்றம் அந்தக் குற்றச்சாட்டுகளை உண்மை அல்ல என்று தள்ளுபடி செய்ததையும் நாடு அறியும். தோழர் பினராயி விஜயன் மீது தங்கக் கடத்தல் வழக்கு பதியும் அளவிற்கு ஆளும் கட்சியின் அடியாளாக அமலாக்கத்துறை நடந்து கொண்டிருப்பதை விபரம் அறிந்த அனைவரும் அறிவோம். எனவே அமலாக்க துறையின் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களாக முன்வைப்பது பொருத்தமானது அல்ல.

    Advertisement

    அவசர நிலை காலத்தில் இந்தியாவில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மிகப்பெரிய போராட்டங்களும் அதன் காரணமாக அடக்குமுறைகளும் அத்துமீறல்களும் நடந்தது நாடறிந்த வரலாறு. ஆனால் அவசரநிலை காலத்தில் முன்னாள் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு அவரது தாடை உடைக்கப்பட்டது. உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது. அதை முதலமைச்சரே செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்.

    சட்டமன்றத்தை மக்கள் நலனுக்கு எந்த வகையிலும் எள்ளளவுக்கு கூட உதவாத தனிமனித தாக்குதல்களுக்கான இடமாகவோ அல்லது தங்கள் தலைவரை பாராட்டி பேசும் இடமாகவோ மாற்றுவது முற்றிலும் அறமற்ற செயலாகும். கடுமையான அரசியல் ரீதியான விமர்சனங்களை, அதுவும் கூட நாகரீகமாக சட்டமன்றத்திற்கு வெளியே வைப்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது.

    Advertisement

    ஆனால் ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட தமிழக மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தில் நடைபெறும் சட்டமன்றத்தின் நேரத்தை மக்கள் நலனுக்காக அன்றி விரயம் செய்வது, அது யாராக இருந்தாலும் அதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

    English Summary

    CM Vijay in his twitter, I wish to clarify that, during my response speech on the police department's grant request in the Legislative Assembly on 7.9.2026, my body language, which inadvertently came across in between, was not in any way intentional.