சென்னை: மாநிலங்களுக்கு இடையே நதி நீர் பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை பின்பற்ற வேண்டும் என தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் விஜய் உறுதியாக தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை கோவளத்தில் தனியார் ரிசார்ட்டில் தென்னிந்திய முதல்வர்கள் கலந்து கொள்ளும் மாநாடு மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் முதல்வர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், மாநிலங்களுக்கு இடையே நதி நீர் பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற வேண்டும். போதை பொருட்களை தடுக்க மாநிலங்களுக்கு இடையே கூட்டமைப்பு தேவைப்படுகிறது. பெங்களூர் மெட்ரோவை ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்குப்படுத்த வேண்டும். கடற்சார் பொருளாதாரத்திர்கு புதிய திட்டமிடல் அவசிமாகிறது. தென் மாநிலங்களுக்கு நிதி செலவீன சுயாட்சி அதிகாரம் தேவைப்படுகிறது. கடலோர பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். காவிரி மேலாண்மை உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும். முல்லை பெரியார் அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்தத வேண்டும். தொகுதி மறுவரையறையில் தென்நாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைய கூடாது. வலிமையான மாநிலங்களே வலிமையான இந்தியாவை உருவாக்கும் என்பதில் தமிழகம் உறுதிப்பட நம்புகிறது. அதன்படி மத்திய அரசுடன் நாம் அனைவரும் இணைந்து வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவோம். அண்டைய மாநிலங்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நம் உறவுகளை பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என விஜய் பேசியிருந்தார். கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு அருகே அமர்ந்திருந்த விஜய், காவிரி குறித்து பேசியதும் சிவக்குமாரின் முகம் சட்டென மாறியது. அது போல் முல்லை பெரியாறு பிரச்சினை குறித்து கேரள முதல்வர் சதீஷன் முன்பு விஜய் பேசியிருந்தார். தென் மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராக முதல்வர் விஜய் நியமிக்கப்பட்டிருந்தார். கவுன்சிலின் செயலாளராக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய்குமார் நியமனம் செய்யப்பட்டிருந்தார். கவுன்சிலின் தலைவராக உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளார். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுவை ஆகிய மாநிலங்களை இணைக்கும் அமைப்பு தென் மண்டல கவுன்சிலாகும். மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பிற்கு தேவைப்படும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க 5 மாநில முதல்வர்களையும் தலைமைச் செயலாளர்களையும் இந்த கவுன்சில் ஒன்றிணைக்கிறது. தென் மண்டல கவுன்சிலின் தமிழக உறுப்பினர்களாக அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகந் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாடு இன்று கோவளத்தில் ஒரு ரிசார்ட்டில் நடந்து வருகிறது. இதில் புதுவை முதல்வர் ரங்கசாமி, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை, அவர்களுக்கு பதிலாக அவர்களது பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.