“தமிழ்னா கெத்து.. தமிழ்னா பவர்! ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றாக வந்து நிற்கும்”- முதல்வர் விஜய் பேச்சு

  • சென்னை: தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல, அது நமது உயிர், உணர்வு எனத் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழக ஆளுநர் பங்கேற்கும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என தொடர்ச்சியாக சர்ச்சை எழுந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பின்னுக்கு தள்ளப்பட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    Advertisement

    தமிழக முதல்வராக விஜய் பதவியேற்கும் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வந்தே மாதரம் பாடப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதனை தொடர்ந்து, அமைச்சரவை விரிவாக்கத்திற்கான பதவியேற்பு விழாவில் கூட அதே போல் பாடப்பட்டது.

    சமீபத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை எழுதிய மனோன்மனியம் சுந்தரனார் பெயர் கொண்ட பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னதாக இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றால் தன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை உத்தரவிட்டிருந்ததாக அப்பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.

    Advertisement

    இந்நிலையில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என தனித் தீர்மானத்தை சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் இன்று கொண்டு வந்துள்ளார். கல்வி நிறுவனம், அரசு அலுவலகம் என அனைத்தி பொதுத்துறை நிறுவனம் நிறுவனங்களிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாக பாட வேண்டும் என்ற தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டு வந்து உரையாற்றினார்.

    முதலமைச்சர் விஜய் பேசுகையில், "தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல, அது நமது உயிர், உணர்வு. உலகத்தையே உயர்த்திப் பிடிக்கும் மொழி தமிழ். தமிழ் என்று கூறினால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒன்றாக வந்து நிற்கும். தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டில் முதல் இடத்தில்தான் இருக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிப்பதுதான் மாநில உரிமை.

    Advertisement

    தமிழ் உலகின் தொன்மை வாய்ந்த செம்மொழியாகவும் தமிழர் நாகரீகம் உலகின் மிகப்பழமையான பண்பாட்டு மரபுகளில் ஒன்றாகவும் திகழ்வதை இப்பேரவை பெருமையுடன் பதிவு செய்கிறது. மனோன்மணீயம் சுந்தரனாரால் 1891ல் எழுதப்பட்ட மனோன்மணீயம் என்ற நாடக நூலின் பாயிரத்திலிருந்து எடுக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து 1970 நவம்பர் 23 முதல் அரசு விழாக்களில் முதலில் பாடப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    2021 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி முதல் மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் எனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்தியாவின் நெற்றியில் இருக்கும் பொட்டு தான் தமிழ் மொழி; தமிழும், தமிழனும் இல்லாத நாடு ஏது? தமிழ் ஒரு சிந்தனை, தமிழ் என்றால் அன்பு, தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் பவர். தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலிடத்தில் இருக்க வேண்டும்.

    தமிழ்த்தாய் வாழ்த்தின் பெருமையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்." எனப் பேசினார்.

    English Summary

    Chief Minister Vijay moved a special resolution in the Assembly today, mandating that the 'Tamil Thai Vazhthu' be sung at the beginning of all events held in educational institutions and government offices across Tamil Nadu. Speaking on the occasion, he stated that Tamil is not merely a language but represents our very life and soul.