6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்.. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம்

  • சென்னை: தமிழக நகர்ப்புறங்களில் சுகாதாரம் மற்றும் பசுமையை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த ஆறு மாதங்களை இலக்காக வைத்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement

    தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு கடந்த ஆட்சியில் தனி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தத் துறையை முதல்வர் விஜய் நேரடியாக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். நகர்ப்புறங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நோக்கத்துடனேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், அடுத்த ஆறு மாதங்களுக்குள் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

    மேலும், தினமும் காலை நேரங்களில் கமிஷனர்கள் முதல் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் தங்களது பகுதிகளில் நேரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், ஆய்வின்போது குப்பைகள், கட்டடக் கழிவுகள், சட்டவிரோத போஸ்டர்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    அதேபோல், சாலையோரங்கள் மற்றும் சாலை நடுப்பகுதிகளில் (Center Median) பசுமைப் பரப்பை அதிகரிக்கும் பணிகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகளிலேயே குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் முறையை ஊக்குவித்து, அவற்றை ஒரே இடத்தில் கொட்டாமல் மறுசுழற்சி மற்றும் அறிவியல் முறையில் அகற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்தப் பணிகளில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜயும் பல்வேறு பகுதிகளில் திடீர் நேரடி ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதால், மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் சுகாதாரம் மற்றும் பசுமை தொடர்பான பணிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    English Summary

    CM Vijay: Tamil Nadu Chief Minister Vijay has directed officials to achieve significant improvements in urban sanitation and green cover within the next six months. He also warned that action would be taken against officials who fail to effectively implement cleanliness and waste management measures.