சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கும் இந்த நேரத்தில், விலைவாசி உயர்வு கடுமையாக எகிறியிருப்பதாக மக்கள் புலம்புகின்றனர். இந்நிலையில், விலைவாசி உயர்வு குறித்து மளிகை கடைக்கு போய் முதலமைச்சர் விஜய் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ் செய்திருக்கிறார்.
இது குறித்து அவர் தனது x பக்கத்தில், "முதலமைச்சர் அவர்கள் இலண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார். போகட்டும்.. அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். தயவுசெய்து, மாண்புமிகு உணவுத்துறை அமைச்சரிடம் கேட்டுவிட வேண்டாம். அவர் எல்லாம் 'நார்மலாக' இருக்கிறது என்பார். மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்கு பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள். அவர்களிடம் கேளுங்கள்" என்று பதிவிட்டிருக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது. விலைவாசி உயர்வு குறித்து ஒன்இந்தியா தமிழ் நடத்திய கள ஆய்வில் மக்கள் புலம்புகின்றனர். குறிப்பாக அரிசி விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். டெல்டா மாவட்டங்களிலிருந்துதான் பரவலாக அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், இங்குள்ள மக்களால் கூட சன்ன ரக அரிசியை வாங்கி பயன்படுத்த முடியவில்லை. காரணம் விலை உயர்வுதான். அரிசி மட்டுமல்லாது காய்கறிகள், பால், பழங்கள் என அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்திருக்கிறது. இன்றைய தேதியில் தக்காளி கிலோ ரூ.40-50 வரை விற்பனை செய்யப்படுகிறது. ரசம் வைக்க வேண்டும் என்றால் கூட தக்காளி அவசியம். 4 பேர் கொண்ட குடும்பத்தில் ஒருவர் மட்டும் வேலைக்கு போகிறார் எனில் ஒரு நாள் கூலி ரூ.500 வரும். இதை வைத்து ஒரு கிலோ அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கினால் ரூ.200 வரை செலவாகிவிடும். மீதமுள்ள ரூ.200 வைத்து எப்படி குடும்பத்தை நடத்த முடியும்? இப்படியாக விலைவாசி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. ஆனால், அரசு தரப்பில் அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை என்று அமைச்சர்கள் கூறுகின்றனர். மக்களுக்கு சமாதானம் சொல்லுவதை விட்டுவிட்டு, உடனடியாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையில் திமுக தலைவர் விலைவாசி உயர்வு குறித்து காட்டமாக பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.