ஆக்‌ஷனில் இறங்கிய முதலமைச்சர் விஜய்.. தேனி கேஸில் அடுத்தடுத்து பாய்ந்த உத்தரவு... அலறும் அதிகாரிகள்

  • சென்னை: தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய சம்பவம் சிறைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் இப்போது நேரடியாக தலையிட்டுள்ளார். சில முக்கிய உத்தரவுகளையும் பிறத்துள்ளார்.. இது சம்பந்தமாக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது..!!

    Advertisement

    தேனி மாவட்ட சிறையில் கடந்த அக்டோபர் 26-ம் தேதி இரவு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

    Advertisement

    தேனி சிறைக்கைதிகள்

    இதற்காக சிறையிலிருந்த சமையல் கரண்டியைப் பயன்படுத்தி போலீசாரை தாக்கியதுடன், காவலர்களின் தங்கச் சங்கிலியையும் பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர். செருப்பு இல்லாமல் தப்பியதால் கால்களில் காயம் ஏற்பட்ட நிலையில், சட்டைகளைக் கிழித்து கால்களில் கட்டிக்கொண்டு மலைப்பகுதிகளுக்குள் சென்றுள்ளனர்.

    இதையடுத்து 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. முதல் 24 மணி நேரத்தில் 13 பேரும், அடுத்த 12 மணி நேரத்தில் மீதமிருந்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து சிறைத்துறையில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 2 தலைமைக் காவலர்கள், ஒரு முதல்நிலைக் காவலர், 6 இரண்டாம் நிலைக் காவலர்கள் என 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்...

    Advertisement

    சஸ்பெண்ட் நடவடிக்கை

    இந்நிலையில், தேனி மாவட்ட சிறையில் கண்காணிப்பாளர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த துணைச் சிறை அலுவலர் நாகேஸ்வரனும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், சேலம் மத்திய சிறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இப்படிப்பட்ட சூழலில், சிறை நிர்வாகத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழக அரசு உத்தரவு

    "தேனி மாவட்டச் சிறையில் 26.10.2026 அன்று இரவு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பிச் சென்றனர்.

    Advertisement

    இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் துரிதமாகச் செயல்பட்டு, தப்பிச் சென்ற 17 கைதிகளையும் மீண்டும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சிறை நிர்வாகத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகள், கண்காணிப்புப் பணிகளில் நிலவிய மெத்தனப்போக்கு மற்றும் பணியில் ஏற்பட்ட கவனக்குறைவு ஆகியவை குறித்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.

    பணியிட மாற்றம்

    அதன்படி, தேனி மாவட்டச் சிறையில் 06.08.2024 முதல் சிறைக் கண்காணிப்பாளர் பொறுப்பை கூடுதலாகக் கவனித்து வந்த துணைச் சிறை அலுவலர் நாகேஸ்வரன், சிறைக் கைதிகள் மற்றும் பணியாளர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளில் உரிய கவனம் செலுத்தத் தவறியதற்காக, தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின்படி, 30.10.2026 முதல் மறு உத்தரவு வரும் வரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    மேலும், சிறை நிர்வாகத்தில் கண்காணிப்பு, பொறுப்புடைமை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில், மதுரை மத்தியச் சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் சேலம் மத்தியச் சிறைக் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    சிறைகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் எவ்விதத் தொய்வும் ஏற்படாத வகையில், சிறைத் துறை அலுவலர்கள் தங்களது பொறுப்புகளை முழு கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் மேற்கொள்ள வேண்டும் என்றும், பணியில் மெத்தனமாகவோ, கவனக்குறைவாகவோ செயல்படும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    English Summary

    CM Vijay Takes Action on Theni Jail Escape: Strict Orders Issued, Officials Face Suspension and Transfer